பாவேந்தர் நூலகம்: தந்தையின் நூலகக் கனவு.. நனவாக்கி காட்டிய மகள்!
தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் அல்லி, தன் தந்தையின் கனவை நனவாக்கும் பொருட்டு ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஒன்றை அமைத்து அனைவரின் பாரட்டையும் பெற்றுள்ளார்.
 
                                    ’வீட்டையே நூலகமாக மாற்றியமைக்க வேண்டும்' என்ற தம்முடைய தந்தையின் கனவை நனவாக்கி இருக்கிறார், அல்லி. திருமழபாடியில் அமைந்துள்ளது, இவர் நடத்திவரும் 'பாவேந்தர் நூலகம்’. இதுகுறித்து அல்லியிடம் பேசினோம்.
"நாச்சியார்கோயிலிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். என் தந்தை அ.ஆறுமுகம், ஓய்வுபெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர். சங்க இலக்கியம், திருக்குறள் திறனாய்வு உள்ளிட்ட பல நூல்களை எழுதிப் பதிப்பித்து, வெளியிட்டுள்ளார். என் அம்மா சாரதாம்பாள் பிறந்த திருமழபாடியில்தான் நாங்கள் வசித்து வருகிறோம்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இது, சற்றே பெரிய கிராமம்தான். இதனைச் சுற்றிலும் விவசாயத் தொழில் சார்ந்த கிராமங்கள் உள்ளன. 'வீட்டையே நூலகமாக மாற்றியமைக்க வேண்டும்' என்பதுதான் என் தந்தையின் கணவு யோசித்துப் பார்க்கையில் ஒரு வீட்டினுடைய அமைப்பு வேறு; ஒரு நூலகத்தின் அமைப்பு வேறு என்று தோன்றியது. அதனால், என் பெற்றோரிடம் கலந்துபேசினேன். பின்னர், தனி இடத்தில் நூலகம் உருவாக்குவதென்று நாங்கள் அனைவரும் ஒருமனதாக
முடிவு செய்தோம்.
ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நூலகம்:
ஊரிலேயே தனியாக இடம் தேடினோம்; கிடைத்தது. உடனே, அதனை வாங்கிப் போட்டோம். இரண்டு அண்ணன்கள், நான், மூன்று தம்பிகள் என நாங்கள் மொத்தம் 6 பிள்ளைகள். பெற்றோரின் ஆலோசனையோடு, தனியிடத்தில் கட்டடம் கட்டத்தொடங்கினோம். தரைதளத்தில், இருசக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியுடன் அலுவலக அறை இருக்கிறது. முதல் தளத்தில் முதல் தளத்தில் புத்தகங்கள் நிறைந்த அறைகள், நூலகர் அறை, கழிவறை வசதிகள் உள்ளன. இரண்டாம் தளத்தில், அரசுத் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு பயிலரங்குக்கூடம் என அமைத்துள்ளோம். இந்த நூலகத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்து முடிப்பதற்குள், பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேர்ந்தது. இந்த நூலகத்தைக் கட்டிமுடிக்க 2 ஆண்டுகள் தேவைப்பட்டன.
என் பெற்றோரின் சேமிப்புத் தொகை, நான், என் சகோதரர்கள் ஐவரின் சேமிப்புத் தொகையைக் கொண்டே 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த நூலகத்தைக் கட்டிமுடித்தோம். இடையில், பணப்பற்றாக்குறை வந்துவிட்டது. தங்கநகைகளை வங்கியில் அடகுவைத்து, பதினான்கரை லட்ச ரூபாய் கடன் பெற்றுத்தான் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்தோம்.
கேள்விப் பட்டவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ‘ஒரு தொழிலோ, வியாபாரமோ ஆரம்பிக்க இருக்கும்போது, கையிலிருக்கும் தங்கநகைகளை அடகு வைத்துதான் பலரும் பணம் புரட்டிக்கொள்வார்கள். ஆனால், இவர்கள் என்னாடாவென்றால், எந்தவொரு வருவாயும் இல்லாத நூலகத்தைக் கட்டிமுடிக்க, வங்கியில் தங்கநகைகளை அடகுவைத்து, கடன் வாங்கியிருக்கிறார்கள்’ என்று பலரும் பேசிக்கொண்டார்கள்.
எங்களுடைய நூலகத்தில், பல்துறை சார்ந்த ஏழாயிரம் புத்தகங்கள் உள்ளன. சிறுவர் இலக்கிய நூல்கள், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதை நூல்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகளுக்கான முன்மாதிரி பயிற்சிப் புத்தகங்கள் எனத் தனித்தனியாகப் பிரித்து, அடுக்கிவைத்திருக்கிறோம்.
நூலகத்திற்கு வருகிறவர்கள் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக மேசை, நாற்காலிகள் உள்ளன. குடிநீர் மற்றும் கழிவறை வசதியும் செய்துள்ளோம். போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவ மணிகளுக்குத் தேவைப்படும் புத்தகக் குறிப்புகளை ‘பிரின்ட்அவுட்’ எடுப்பதற்கான வசதியும் உள்ளது. வரும் நாள்களில் மேலும் பல வசதிகளைச் செய்துத் தருவதற்குத் திட்ட மிட்டுள்ளோம்’’ என்றார், அல்லி.
(கட்டுரையாளர்: ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு/ சிநேகிதி / 26.06.2025)
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            