‘யு’ சான்றிதழ் பெற்றது மெய்யழகன் திரைப்படம்
கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கிற மெய்யழகன் திரைப்படத்துக்கு தணிக்கைக் குழுவினரால் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக அழகியதொரு காதல் காவியமாக வெளிவந்த திரைப்படம் தான் ‘96’. மாபெரும் வெற்றி கண்ட இத்திரைப்படத்தின் இயக்குநரான ச.பிரேம் குமாரின் அடுத்த படம் மெய்யழகன். நடிகர் கார்த்தியின் 27வது படமாக உருவாகியிருக்கும் இந்த மெய்யழகன் திரைப்படத்தில் கார்த்தியோடு முக்கியப் பாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இம்மாதம் 27ம் தேதி திரைக்கு வருகிறது.
இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்ட போது டீசரைத் தூய தமிழில் கிளர்வோட்டம் வெளியானது என அறிவித்தது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியான நிலையில் நல்லதொரு உணர்வுப்பூர்வமான திரைப்படமாக மெய்யழகன் வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு மிகுந்திருக்கிறது. கார்த்திக்கும் அவரது அத்தானான அரவிந்த்சாமிக்கும் இடையிலான பிணைப்பை மையமாகக் கொண்டுள்ளது மெய்யழகன்.
இந்நிலையில், மெய்யழகன் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த வயதினர்தான் பார்க்க வேண்டும் என்கிற எந்த நிபந்தனைகளும் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இத்திரைப்படத்தைக் கண்டுகளிக்கலாம். மெய்யழகன் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் என்கிற எதிர்பார்ப்பை படத்தின் முன்னோட்டம் தூண்டியிருக்கிறது. போக, 96 திரைப்படம் கொடுத்த தாக்கத்தால் ப்ரேம்குமாரின் இந்தப் படத்தை பலரும் ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டுள்ளனர்.
What's Your Reaction?