மோகன் ஜி-க்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது... வழக்கறிஞர் பாலு பேட்டி!
காவல்துறை செய்தது இயக்குநர் மோகனுக்கு மன உளைச்சலையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என அவரது வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கோயில்களுக்கு வழங்கப்படும் நெய்யின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல, பழனி கோவில் பஞ்சாமிர்த பிரசாதம் குறித்துக் கடந்த சில நாட்களாக அவதூறு பரப்புவதாகக் கூறி பழனி அடிவார காவல் நிலையத்தில் பாஜக பிரமுகர்கள் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வக்குமார் மீது கோவில் நிர்வாகம் புகார் அளிக்கப்பட்டது. இதில் செல்வகுமார் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் பிரபல திரைப்பட இயக்குநர் மோகன்ஜி பழனி பஞ்சாமிர்தம் குறித்தும், அதில் ஆண்மைக் குறைவு, கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதில், ”இது எனக்குக் கிடைத்த செவி வழி செய்தி என்றும், என்னிடம் ஆதாரம் இல்லை” என யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார் மோகன் ஜி. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பழனி கோவில் தேவஸ்தானம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் மோகன் ஜி மீது புகார் கொடுக்கப்பட்டது.
இதேபோல் திருச்சி சமயபுரம் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இயக்குநர் மோகன்ஜி மீது தவறான தகவல்களைப் பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோகன் ஜி நேற்று சென்னை காசிமேட்டில் உள்ள தனது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனது வழக்கறிஞர் பாலுடன் காவல்துறைமீது மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மோகன் ஜி புகார் மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலு, “இயக்குனர் மோகனினுக்கு உடை மாற்ற கூட நேரம் கொடுக்காமல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எந்த வழக்கில் கைது செய்யப்படுகிறோம்; கைது செய்ய வருகை தந்துள்ள காவல் துறையினர் எந்த காவல் பகுதியை சேர்ந்தவர்கள் ? என்று மோகனுக்கும் அவரது மனைவி அவரது தாயாருக்கு கூட தெரிவிக்காமல் கைது செய்துள்ளனர். நேற்று நாள் முழுவதுமே காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு திருச்சி வரை எதற்காக அழைத்து செல்கிறோம் என்று சொல்லாமலேயே அழைத்து சென்றுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இந்த புகார் மனுவை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கொடுத்திருக்கிறோம். புகார் மனுவை விசாரித்து விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் பாலு, “காவல்துறையினர் பற்றி மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தால் எங்களைப் பற்றியே புகார் கொடுக்கிறீர்களா என இன்னும் பல வழக்குகளை உங்கள் மீது போடுவோம் என்ற மனோபாவம் தான் காவல்துறையினர் மத்தியில் இருக்கிறது.
மோகன்ஜி பேசிய வீடியோவை பாருங்கள். மிகுந்த விழிப்புணர்வுடன் பேசி இருப்பார். இப்படி ஒரு தகவல் செவி வழி செய்தி உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறி இருப்பார். இப்படி கூட ஒருவர் சொல்லக்கூடாதா? காவல்துறையினர் அரசில் ஏவல்களாக இருக்க கூடாது. சாராயக்கடைகள் என சொல்லப்படும் சந்து கடைகளை மூடுவது கஞ்சா புழக்கத்தை தடுப்பது முதலிய முக்கியமான விஷயங்களில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும்.
சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும்; பொது அமைதியை கெடுக்க வேண்டும் ; அரசுக்கு அவப்பெயர் கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் அவர் பேசினால் நடவடிக்கை எடுக்கலாம். அப்படி எதுவும் இல்லையே. சாதாரணமாக சமூக பொறுப்புடன் கூறிய விஷயம்.
நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு மோகனுக்கு மன உளைச்சலையும் மனவேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வழக்கு போட்டால் சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் காவல்துறையும் சட்டரீதியாக நடந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
What's Your Reaction?