"உதயநிதி ஆபாசமாக பேசவே இல்ல..." – மகனுக்காக களமிறங்கிய மு.க.ஸ்டாலின்..!

முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தந்தையும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

Aug 4, 2026 - 18:05
"உதயநிதி ஆபாசமாக பேசவே இல்ல..." – மகனுக்காக களமிறங்கிய மு.க.ஸ்டாலின்..!

தஞ்சையில் நேற்று(ஆகஸ்ட் 03) திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து நட்த்தப்பட ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜயையும், நடிகையையும் இணைத்து ஆபாசமாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இன்று (ஆகஸ்ட் 04) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதோடு, சட்டப் போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். உதயநிதியின் கைதுக்கு ஆதரவாக தவெகவினர் ஸ்வீட்ஸ் கொடுத்து கொண்டாடி வரும் நிலையில், அவரது கைதை எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். 

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவரும் உதயநிதியின் தந்தையுமான மு.க.ஸ்டாலின், தவெக அரசை கடுமையாக சாடியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், ”காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சை கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை அம்பலப்படுத்தினார்.

’நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடிக்கையில், அமைச்சர்கள் முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார்.

இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பிரச்சினையைத் திசைதிருப்ப எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை, அவரை அராஜகமாகக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது.

நாளை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது, எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார்.
விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்?

'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!

ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார்.

உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.

தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும். தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்” என்று பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow