தேர்தல் பிரசாரத்தில் மத ரீதியிலோ, தனிப்பட்ட முறையிலோ விமர்சிக்க கூடாது... தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மத ரீதியிலான அல்லது தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களை தேர்தல் பிரசாரமாக செய்ய கூடாது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
மத ரீதியிலான அல்லது தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களை தேர்தல் பிரசாரமாக செய்ய கூடாது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறுகையில், "சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காகித தாள்கள் மிகக்குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும். குற்றப்பின்னணி வேட்பாளர் விவரங்களை நாளிதழ்களில் வெளியிட கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகள் மூலம் கண்காணிக்கப்படும். மத்திய, மாநில, மாவட்ட எல்லைகளில் புதிதாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். பணம், பரிசுப்பொருட்கள், மதுபானம், போதைப்பொருட்கள் நடமாட்டம் தடுக்கப்படும். பண பலம், ஆள் பலம், வதந்திகள், விதிமீறல்கள் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் முன் உள்ள 4 சவால்கள். வேட்பாளர் விவரங்களை செயலியில் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வங்கி வாகனங்களில் பணம் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்படுகிறது. வாக்குக்கு பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை வாக்காளர்களுக்குக் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் செய்யலாம், ஆனால் போலி செய்திகளை பரப்பக்கூடாது, அப்படிப் பரப்பினால் கடும் தண்டனை விதிக்கப்படும்.
அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பரப்புரையில் ஈடுபடவேண்டும். மத ரீதியாகவோ, தனிபட்ட முறையிலோ விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது. விளம்பரங்களை நம்ப தகுந்த செய்தியாக்க முயற்சிக்கக் கூடாது. தேர்தல் பரப்புரையில் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தக்கூடாது". என அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?