இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடு.. குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்

உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது என குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கு எதிராக இந்தியாவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது என நாடாளுமன்ற கூட்டுக்குழு அமர்வில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விமர்சித்துள்ளார்.

Jun 27, 2024 - 13:11
இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடு.. குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்

நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்ற குதிரைப்படை அணிவகுப்புடன் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அவரை வாயிலில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இதையடுத்து செங்கோல் மரியாதையுடன் குடியரசுத்தலைவர் புதிய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக நுழைந்தார்.

இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பேசிய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி தலைமையில் பொறுப்பேற்ற புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார். மீண்டும் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ”காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். 2024ஆம் ஆண்டு தேர்தலை வெற்றி கரமாக நடத்திமுடித்த தேர்தல் ஆணையத்து நன்றி. 

60 ஆண்டுகளுக்கு பின் மக்கள் ஒரே அரசை மூன்றாவது முறையாக அமர்த்தியுள்ளனர். இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் முக்கியமான திட்டங்கள் இடம்பெறும் என நம்புகிறேன். அரசின் வாக்குறுதிகளில் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஸ்திரமான அரசின் மூலமே மக்களின் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்களுக்கு வாழ்த்துகள். உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று, போர் என அனைத்தையும் கடந்து நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. 

மேலும் சிறிய நகரத்துக்கும் விமான சேவை கிடைத்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இதனிடையே வடகிழக்கு மாநிலங்கள் குறித்து அவர் உரையாற்றும்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். மணிப்பூர் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.இதேபோல் புதிய மருத்துவக் கல்லூரிகள் பற்றி பேசும் போது “நீட் நீட்” என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆனாலும் தொடர்ந்து பேசிய குடியரசுத்தலைவர், “2036ல் இந்தியா ஒலிம்பிக் போட்டியை நடத்த தயாராக உள்ளது. சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 125வது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படும். மத்திய அரசின் நடவடிக்கைகளால் மாநிலங்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. 
உலகப் பொருளாதாரத்தில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்யும் நாடாக இந்தியா இருந்து வருவதாகவும் இந்தியாவை உலகின் 3வது பெரும் பொருளாதாரமாக மாற்ற தனது அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறினார். 

10 ஆண்டுகளில் 11வது இடத்தில் இருந்து 5வது பெரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது எனக் கூறிய அவர், பல்வேறு சமூக முன்னெடுப்புகள், வரலாற்றுசிறப்பு மிக்க பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் அமைதியைக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் காஷ்மீரில் அமைதியற்ற சூழலை உருவாக்கிய சக்திகளுக்கு தேர்தலின் மூலம் மக்கள் பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். நீட் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனக்கூறிய குடியரசுத்தலைவர், அரசியலைக் கடந்து தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அரசியலமைப்புக்கு எதிராக இந்தியாவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது எனவும் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக அவசரநிலை குறித்து குடியரசுத்தலைவர் விமர்சித்தார். ஜனநாயகத்தின் கருப்பு நாள் அவசர நிலை எனவும் அவர் கடுமையாக குற்றம்சாட்டினார். இதையடுத்து உரையை முடித்துக்கொண்டு மீண்டும் செங்கோல் மரியாதையுடன் நாடாளுமன்றத்தில் இருந்து அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow