“1000 ஏக்கர், 1000 மாடு!” – முன்னாள், இந்நாள் அமைச்சர்களை மாட்டிவிட்ட எம்.ஆர்.கே..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் இந்நாள், முன்னாள் அமைச்சர்களின் நிலவிவரங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தாலும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. 

Aug 10, 2026 - 12:34
Aug 10, 2026 - 12:38
“1000 ஏக்கர், 1000 மாடு!” – முன்னாள், இந்நாள் அமைச்சர்களை மாட்டிவிட்ட எம்.ஆர்.கே..!

வேளாண் பட்ஜெட் குறித்து பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்பு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். அந்த எதிர்பார்ப்புடன் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் என நினைத்ததாகவும், ஆனால் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிடம் அதிக அளவில் நிலங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். அதாவது, முன்னாள் அமைச்சர் நேரு பெரிய விவசாயி ஆயிரக்கணக்கான மாடு வளர்க்கிறார் வாழை தென்னை நெல் என பெரிய அளவில் விவசாயம் செய்கிறார்.அதே போல வேலு டிராக்டர் ஓட்டுவார், வயலில் அண்டம் வெட்டுவார் என்று எம்.ஆர்.கே. குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், நிலம் வைத்திருப்பதில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி, நேருவை அந்த விவகாரத்தில் சிக்க வைக்க வேண்டாம் என்ற பொருளில் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செங்கோட்டையனையும் தனது பேச்சில் குறிப்பிட்டார். “நேரு பெரிய விவசாயி... ஆயிரம் மாடுகள், ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்கிறார். செங்கோட்டையனுக்கு இப்போது எவ்வளவு நிலம் இருக்கிறது என்று கணக்கு பார்த்தால் தெரியும்” என்ற வகையில் அவர் பேசினார். 

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் இந்த நகைச்சுவையான பதிலால் சட்டப்பேரவையில் இருந்த உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. பட்ஜெட் விவாதத்தின் தீவிரமான சூழலுக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த வார்த்தைப் பரிமாற்றம் அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் நில விவரங்கள் குறித்து பேசியது, அவர்களுக்கே சிக்கலை உண்டாக்கும் என்றும், இதுகுறித்து விரைவிலேயே நடவடிக்கையை சந்திக்க நேரிடலாம் என்றும் உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow