எடப்பாடி செல்லாக்காசாகிட்டாரா? - ஆட்டத்தை தொடங்கிய சி.வி.சண்முகம்..!

அதிமுகவின் தேர்தல் தோல்வி குறித்து அக்கட்சிக்குள் மீண்டும் கருத்து மோதல் உருவாகியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Aug 10, 2026 - 13:25
எடப்பாடி செல்லாக்காசாகிட்டாரா? - ஆட்டத்தை தொடங்கிய சி.வி.சண்முகம்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், திடீரென வெளியே வந்த சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவின் சமீபத்திய தேர்தல் செயல்பாடுகள், கட்சியின் தலைமை மற்றும் தோல்விக்கான பொறுப்பு குறித்து அவர் விரிவாக பேசினார்.

குறிப்பாக, “47 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எடப்பாடி பழனிசாமியின் சொந்த செல்வாக்குதான் காரணம் என்றால், மீதமுள்ள 181 தொகுதிகளில் அவரது செல்வாக்கு செல்லாக்காசாகிவிட்டதா?” என கேள்வி எழுப்பினார்.

தேர்தல் வெற்றி மற்றும் தோல்விக்கான காரணங்களை ஒரே தராசில் பார்க்க வேண்டும் என்றும், வெற்றி கிடைத்தால் தலைமையின் சாதனையாகவும், தோல்வி ஏற்பட்டால் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது பழியை சுமத்துவதும் சரியான அணுகுமுறை அல்ல என்றும் சி.வி.சண்முகம் விமர்சித்தார்.

வட மாவட்டங்களில் கிடைத்த வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் பங்களிப்பும் முக்கிய காரணம் என குறிப்பிட்ட அவர், தென் மாவட்டங்கள், சென்னை மற்றும் டெல்டா பகுதிகளில் அதிமுக சந்தித்த பின்னடைவை சுட்டிக்காட்டினார். பல மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காத நிலையில், அதற்கான காரணங்களை தலைமை நேர்மையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
மேலும், “வெற்றி பெற்றால் அது அவரால் கிடைத்த வெற்றி; தோல்வி என்றால் மாவட்ட நிர்வாகிகள்தான் காரணம்” என்ற நிலைப்பாடு எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர் தேர்தல் தோல்விகளில் இருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டுமானால், கட்சிக்குள் உண்மையான நிலவரம் குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று தான் கோரவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமிதான் கட்சியின் பொதுச்செயலாளர் என்பதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். ஆனால், தேர்தல் முடிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, கட்சியின் எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என விளக்கினார்.

கட்சியின் தொடர் தோல்விகள் குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பியுள்ள சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சு, அதிமுகவின் உள்கட்சி மோதலை பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow