ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான 4 முக்கிய காரணங்கள்...  தாக்கலான குற்றப்பத்திரிக்கை.. !

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 4, 2024 - 07:15
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான 4 முக்கிய காரணங்கள்...  தாக்கலான குற்றப்பத்திரிக்கை.. !

கடந்த ஜூலை மாதம் 5 ஆம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இக்கொலைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை தீவிரமாக தொடங்கிய நிலையில்,. முதலில் மறைந்த ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழியாக நடந்ததாகவும், அதன் பின்னர் ஆருத்ரா கோல்ட்  மோசடி விவகாரம் என  தொடர்ச்சியாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

சென்னை தனிப்படையினர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து முக்கிய ரவுடிகளான நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பெண் தாதா அஞ்சலை, ஆற்காடு சுரேஷ் என் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 28 நபர்களை போலீசார் கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிக்கையை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை போலீசார் தாக்கல் செய்தனர். 

4892 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். 

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சென்னையில் ஆட்கள் பலத்தோடு  வளர்ச்சியை அடைந்ததால் அதனை தடுக்கவே கொலை செய்ததாக போலீசார் குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ரவுடிசத்தில் சென்னையை அடுத்து யார் ஆள போகிறார்கள் என்ற விவகாரத்தில் ஆர்ம்ஸ்ட்ராங் தடையாக இருந்த காரணத்தினால் ஆத்திரமடைந்து கூட்டு சேர்ந்து கொலை செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நான்கு முக்கிய முன்விரோதங்கள் தான் காரணம் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுடன் ஏற்பட்ட நில விவகாரம், ரவுடி சம்போ செந்தில் உடன் தலைமைச் செயலக காலணியில் வீடு விவகாரத்தில் 30 லட்சம் ரூபாய் மிரட்டி வாங்கிக் கொண்ட விவகாரம், ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கு மற்றும் தென்னரசு கொலை வழக்கு ஆகிய நான்கு முன்விரோதங்கள் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக குற்றப் பத்திரிக்கையில் சென்னை காவல்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக போலீசாரின் விசாரணையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரம் மோசடி தொடர்பாக எந்தவித முன்விரோதமும் இருப்பது தெரியவில்லை என சென்னை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஆற்காடு சுரேஷ் மரணத்தின் போது மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலையை அரங்கேற்ற வேண்டும் என வேகப்படுத்தி இருப்பதாகவும் போலீசார் குற்ற பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதும், குறிப்பாக சிறையில் உள்ள நாகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பொழுதெல்லாம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திட்டம் தீட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல நட்சத்திர விடுதியிலும் கூட்டம் கூட்டி கொலையை செய்ய திட்டமிட்டு இருப்பதும், கிட்டத்தட்ட ஆறு மாதமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரெக்கி ஆபரேஷன் நடத்தி கொலையை அரங்கேற்றி இருப்பதாகவும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பண உதவியை ரவுடி சம்போ செந்தில் கொடுத்திருப்பதாகவும் மூன்றாவது குற்றவாளியான அஸ்வத்தாமன் நாகேந்திரன் போடும் திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தி இருப்பதும் குற்ற பத்திரிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்ற மொத்தம் பத்து லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட பதினோரு குற்றவாளிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியான விசாரணையை நடத்தியதாலே கண்ணுக்குத் தெரியாத மற்ற குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது போன்ற தொடர் விசாரணையிலேயே முக்கிய மூன்று குற்றவாளிகள் ஆன நாகேந்திரன், சம்பவம் செந்தில் மற்றும் அஸ்வத்தாமன் சிக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபர்களின் 63 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களது வங்கி கணக்கில் இருந்த ஒன்றரை கோடி பணம் மற்றும் ரொக்கமாக 80 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்ற பத்திரிக்கையில் 300க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் மற்றும் 750 வகையான ஆவணங்கள் குற்றப் பத்திரிகைக்குள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இறுதியாக, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணனை பிடிக்க விரைவில் வெளிநாட்டிற்கு சென்னை போலீசார் செல்ல இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை ஐந்தாம் தேதி நடந்த இந்த கொடூர கொலைச் சம்பவத்திற்கு 90 நாட்களில் சென்னை தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அனைத்து வித கோணத்திலும் விசாரணை நடத்தி விரைந்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்த தனிப்படை போலீசாருக்கு சென்னை காவல்துறை ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow