முக்தார் அன்சாரிக்கு Slow poison?... குடும்பத்தினர் புகார்... விசாரணைக்கு உத்தரவு..

அரசு மருத்துவர்கள் இருவர் அடங்கிய குழு, முக்தார் அன்சாரியின் உடலை உடற்கூறாய்வு செய்யவுள்ளனர்

Mar 29, 2024 - 18:26
முக்தார் அன்சாரிக்கு Slow poison?... குடும்பத்தினர் புகார்... விசாரணைக்கு உத்தரவு..

நிழலுலக தாதா முக்தார் அன்சாரி சிறையில் திடீர் மரணமடைந்த நிலையில், விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அதுதொடர்பான விசாரணை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்தார் அன்சாரி, 80-களில் நிழல் உலக தாதாவாக வலம் வந்தவர். அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏவைக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளவர் முக்தார் அன்சாரி. சுதந்திர போராட்ட வீரரின் குடும்பத்தைச் சேர்ந்தவரான முக்தார் அன்சாரி, கடந்த 2022-ம் ஆண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அது குறித்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. அதன்பேரில் முக்தார் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதற்கிடையில், திடீரென கடந்த மார்ச் 28-ம் தேதி அவர் சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவரது உடலை, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகாரளித்துள்ளனர். சிறையில், முக்தார் அன்சாரிக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். 

இந்நிலையில் குடும்பத்தினர் புகார் தொடர்பாக விசாரிக்க, 3 பேர் கொண்ட தனிப்படையைக் காவல்துறை அமைத்தது. மேலும், முக்தார் அன்சாரியின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையைச் சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் இருவர் அடங்கிய குழு, முக்தார் அன்சாரியின் உடலை உடற்கூறாய்வு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றச்சாட்டு குறித்த விசாரணை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரப்பிரதேச அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow