"தமிழ்நாடு பெரிய Task...தீயா வேல செய்யணும்" - தொண்டர்களுக்கு மோடி 'அட்வைஸ்'
"தமிழ்நாட்டில் மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் குழப்ப ஆட்சியை திமுக கொடுத்திருக்கிறது"
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தல், பாஜகவினருக்கு பெரிய Task என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
நமோ செயலி மூலம் "எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, தன்னால் தமிழ் பேச முடியவில்லை என தனது அடிமனதில் வருத்தம் உள்ளதாக கூறினார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய தாய்மொழி தமிழ் மொழியாக அமையாததற்கு வருத்தப்படுவதாகவும் உருக்கமாக கூறினார்.
தமிழ்நாட்டில், மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் குழப்ப ஆட்சியை திமுக கொடுத்திருக்கிறது என விமர்சித்த பிரதமர் மோடி, போதைப்பொருள் கடத்தலுக்கு ஆளுங்கட்சியே காரணம் என்று கடுமையாக சாடினார். ஒவ்வொரு குற்றவாளியையும் கைது செய்யும் போதுதான், drug mafia தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ளது தெரிய வந்தது எனவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
திமுகவின் போதைப்பொருள் கலாசாரம், வாரிசு அரசியலால் வெறுப்பில் உள்ள தமிழ்நாட்டு மக்கள், மாற்றம் வேண்டும் என நினைப்பதாக கூறினார். மக்களுக்கு உழைக்காமல், தங்கள் குடும்பத்துக்காக மட்டுமே திமுக உழைக்கிறது என்றும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.
திமுகவினர், மத்திய அரசின் நல்ல திட்டங்களை தடுத்து நிறுத்துகிறார்கள் எனக் கூறிய பிரதமர் மோடி, அதில் ஓரிரு திட்டங்களுக்கு தங்கள் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினார். திமுகவால் உரிமை கொண்டாடப்படும் மத்திய அரசின் திட்டங்களை நீங்கள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
மொத்த தமிழ்நாட்டையும் வென்று வர வேண்டும் என அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளதாக எனக் கூறிய பிரதமர் மோடி, அவரது வெற்றிக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில், உழைத்திட வேண்டுமென கோவை பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். நமோ செயலி மூலம் மோடி மேற்கொண்ட இந்த பிரசாரம், பாஜக தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறது.
What's Your Reaction?