வாய்மையே வெல்லும்... பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா பதிவு... பரபரப்பாகும் வழக்கு

பிரஜ்வால் ரேவண்ணாவின் இந்தப் பதிவால், பாலியல் புகார் விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

May 1, 2024 - 21:04
வாய்மையே வெல்லும்... பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா பதிவு... பரபரப்பாகும் வழக்கு

பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் மஜத எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவை இந்தியா வரவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ள நிலையில், வாய்மையே வெல்லும் என்று பிரஜ்வால் ரேவண்ணா கருத்து தெரிவித்திருக்கிறார். 

நாட்டின் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஆவார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ள இவர், தற்போது பாஜக கூட்டணி சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் மீது கர்நாடகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக 8,000 பென் டிரைவ்களில் ஏறத்தாழ 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஆனால், கடந்த ஏப்ரல் 26-ம் தேதி அவரது தொகுதியில் வாக்களித்த கையோடு பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில், பாலியல் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த தனிப்படை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி அவரைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து, தேவகவுடா அறிவித்தார். மேலும், அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரஜ்வால் ரேவண்ணாவின் பெரியப்பாவும் கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி கருத்து தெரிவித்தார். 

இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள சித்தராமய்யா, பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரஜ்வால் ரேவண்ணா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, விசாரணைக்கு ஆஜராக அவருக்கு 24 மணி நேரம் கெடு விதித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள சித்தராமய்யா, இந்த விவகாரத்தில் தாமதம் செய்யாமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதற்கிடையில் இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரஜ்வால் ரேவண்ணா, தற்போது தான் பெங்களூருவில் இல்லாததால் விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள கெடுவுக்குள் ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், வழக்கறிஞர்கள் மூலம் அதை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குத் தெரிவித்திருக்கிறேன் என்றும், வாய்மையே வெல்லும் என்றும் குறிப்பிட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பிரஜ்வால் ரேவண்ணாவின் இந்தப் பதிவால், பாலியல் புகார் விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow