சிபிஐ அதிகாரிகள் போல பேசி ரூ.50 லட்சம் மோசடி.. சேட்டை செய்த சேட்டன்களை தட்டி தூக்கி தாம்பரம் போலீஸ்
சிபிஐ அதிகாரிகள் போல பேசி ரூ. 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கேரளா கும்பலை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மோசடிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். மோசடி நபர்களைப் பற்றி காவல்துறையினர் பலமுறை எச்சரித்தாலும் இன்னமும் நமது மக்களுக்கு விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. செய்யாத குற்றத்தை செய்ததாக சொல்லி ஒரு லட்சம் 2 லட்சம் இல்லை 50 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் அபேஷ் செய்துள்ளனர் மோசடி பேர்வழிகள். ஏமாந்தது யார் எப்படி ஏமாற்றினார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
சென்னையை அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு திடீரென போன் ஒன்று வந்துள்ளது. போனில் பேசிய அந்த நபர் TRAI யிலிருந்து பேசுவதாக கூறியுள்ளார். தான் பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணிலிருந்து பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக குறுஞ்செய்திகள் மற்றும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த குற்றத்திற்காக மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் பேசினார்.
மேலும் பேசிய அந்த நபர், இந்த வழக்கில் ஸ்கைப் என்ற செயலி மூலம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் மேலும் பண மோசடி வழக்கில் கைதான நபர்களுடன் தங்களுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறியுள்ளார். உங்களிடம் விசாரணைக்கு நடத்தாமல் இருக்க வேண்டும் என்றால் தான் கூறும் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் பணம் அனுப்ப வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் எதைப்பற்றியும் யோசிக்காமல் ரூ.50 லட்சம் பணத்தையும் அனுப்பி உள்ளார். இதன் பிறகு விசாரித்த போது தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சுரேஷ் குமார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.50 லட்சம் அனுப்பப்பட்ட மோசடியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு காவல்துறையினர் ஆய்வு செய்ததில், மோசடி செய்யப்பட்ட பணமானது அப்ரிடி மற்றும் வினீஷ் என்பவரது வங்கி கணக்குகளில் பணம் பெறப்பட்டுள்ளது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் கேரளாவில் பதுங்கி இருந்ததை தனிப்படை காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.
கேரளா மாநிலம் சென்ற காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட அப்ரிடி, வினீஷ், மற்றும் அவரது கூட்டாளிகள் முனீர், பைசலு ரகுமான் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நான்கு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களை தாம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்திய நிலையில் அனைவரையும் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சிபிஐ, போலீஸ் போல் ஆள்மாறாட்ட மோசடி (Fedex, CBI Police), பகுதி நேர வேலை மோசடி (Part time job) அல்லது டெலிகிராம் டாஸ்க் ஸ்கேம் தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் Cyber Help Line 1930, www.cybercrime.gov.in அல்லது சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுகுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளார்.
What's Your Reaction?