வேட்டுவம் தான் ஃபர்ஸ்ட் ! - பா. ரஞ்சித்! ஜெர்மன் தள்ளிப்போனது ஏன் ?

சூர்யாவை வைத்து பா. ரஞ்சித் உருவாக்க நினைத்த ஜெர்மன் படத்தின் தாமதத்துக்கு பின்னால் இருக்கும் காரணமும், அதற்கு முன் உருவான வேட்டுவம் படம். என்ன காரணம் !

Sep 19, 2026 - 14:44
வேட்டுவம் தான் ஃபர்ஸ்ட் ! - பா. ரஞ்சித்! ஜெர்மன் தள்ளிப்போனது ஏன் ?
Before German Comes Vettuvam! Pa. Ranjith

இயக்குனர் பா. ரஞ்சித்தின் சினிமாக்கள் எப்போதும் சமூக நீதி, சமத்துவம், அதிகாரம், அடையாளம் போன்ற ஆழமான கேள்விகளை மையமாகக் கொண்டிருக்கும். அந்த வகையில், அவர் நீண்ட காலமாக கனவு படமாக உருவாக்க நினைத்த திரைப்படம் தான் ஜெர்மன். 

நடிகர் சூர்யாவை வைத்து ஜெர்மன் படத்தை இயக்க வேண்டும் என்பது பா. ரஞ்சித்தின் நீண்ட நாள் திட்டமாக இருந்தது. குறிப்பாக தங்கலான் படத்திற்குப் பிறகு இந்த கனவு படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படம் தற்போது தள்ளிப்போனதற்கான காரணத்தை பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

"ஜெர்மன்" ஒரு எதிர்கால உலகத்தின் கதை! :

சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஜெர்மன் படத்தின் கதை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த படத்தில், மதுவுக்கு அடிமையான ஒரு விமானி பெர்முடா முக்கோணத்தில் சிக்கி, வேறொரு உலகத்திற்கு செல்வது போன்ற கற்பனை பின்னணி அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. அந்த மாற்று உலகில் சாதி, பாகுபாடு போன்ற பிரிவுகள் இல்லாமல் அனைவரும் சமமாக வாழும் ஒரு சமூகத்தை பா. ரஞ்சித் உருவாக்க நினைத்திருந்தார்.

சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்யும் அறிவியல் புனைவு கதையாக ஜெர்மன் உருவாக இருந்தது.

ஜெர்மனுக்கு முன் ஏன் வேட்டுவம் :

சூர்யாவின் ஜெர்மனுக்கு முன்பு சீக்வல் படமாக வேட்டுவம் எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, பா. ரஞ்சித் " தங்கலான் முடித்தபிறகே ஜெர்மன் தான் எடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், வேட்டுவம் கதை எனக்கு உந்துதலாக இருக்கும் என்ற எண்ணம் என்னை ஆர்வப்படுத்தியது. அதனால் தான் சூர்யாவுடனான படம் தள்ளிப்போகிறது." என்று கூறினார். 

மேலும், வேட்டுவம் படத்திற்கு அடுத்ததாக சர்பட்டா பரம்பரை 2வது பாகம் எடுக்கப்போவதாகவும், அதன்பிறகே சூர்யா சார் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல் உடன் இணைய ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தெரிவித்தார். 

சாதாரண விஷயங்களிலும் மறைந்திருக்கும் பாகுபாடு :

சமூகத்தில் இருக்கும் பாகுபாடுகள் எப்போதும் வெளிப்படையாக தெரியாது என்று பலமுறை கூறியுள்ள பா. ரஞ்சித், தேநீர் கடைகளில் பயன்படுத்தப்பட்ட தனித்தனி டம்ளர் முறையை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.

இன்று அந்த நடைமுறைகள் மாறியிருந்தாலும், சில நேரங்களில் வேறு காரணங்களின் பெயரில் பிரிவுகள் தொடர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். இந்த சமூக பார்வையே அவரது படங்களின் அடிப்படையாக இருந்து வருகிறது.

வழக்கமான கேங்ஸ்டர் கதையல்ல வேட்டுவம் :

முதலில் வேட்டுவம்  ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக இருந்தது. பொன்னி பகுதியைச் சேர்ந்த சோழன் என்ற தினக்கூலி தொழிலாளி எப்படி ஒரு பிரபலமான கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதே கதையின் மையமாக இருந்ததாக கூறப்பட்டது.

ஆனால், பின்னர் பா. ரஞ்சித் அந்த கதையை பெரிய சமூக அரசியல் உலகமாக மாற்றியுள்ளார்.

அதிக வன்முறையை மையமாக வைத்திருந்த ஆரம்ப யோசனையிலிருந்து விலகி, மனிதர்களின் அதிகாரப் போராட்டம், இனக்குழுக்கள், தலைமைக்கான போட்டி போன்ற அம்சங்களை இணைத்து புதிய வடிவம் கொடுத்துள்ளார்.

பிரம்மாண்ட வேட்டுவம் உலகம் :

வேட்டுவம் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை இணைக்கும் ஒரு பெரிய உலகமாக உருவாகிறது.

இந்த உலகில் அதிகாரம் என்பது பரம்பரையாக கிடைப்பதில்லை. பல்வேறு குழுக்கள் தலைமைக்காக போட்டியிடுகின்றன. அதற்காக "அடிமுறை", "மல்லர் கம்பம்" மற்றும் "குட்டு வரிசை" எனப்படும் பழமையான விளையாட்டு விதிகளின் அடிப்படையில் நடைபெறும் "இந்திர விழா" என்ற போட்டி முக்கிய இடம் பெறுகிறது.

மேலும், இந்த படத்தில் வழக்கமான ஹீரோ - வில்லன் என்ற பிரிவுகள் இல்லாமல், ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து கதை நகர்கிறது.

வேட்டுவம் பிறந்த கதையை சொன்ன பிறகே ஜெர்மன் உலகம்! :

பா. ரஞ்சித்தின் இந்த இரண்டு படங்களும் தனித்தனி கதைகள் மட்டுமல்லாமல், ஒரே பெரிய சிந்தனையின் இரண்டு அத்தியாயங்களாக இருக்கலாம்.

வேட்டுவம் மனிதர்கள் பிரிவுகளை உருவாக்கிய காலத்தை காட்டினால், ஜெர்மன் அந்த பிரிவுகளை கடந்து சமத்துவம் உருவான எதிர்கால உலகத்தை காட்டும் என சினிமா வல்லுநர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow