பொங்கல் புத்தாடை தயாரிப்பில் சிக்கல்?...நெசவாளர்களின் கோரிக்கையை அரசு கேட்குமா?

பொங்கல் இலவச வேட்டி, சேலை தயாரிப்பில் ஈடுபடும் நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி தொடர்ந்து போராடி வரும் நிலையில், திட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Sep 20, 2026 - 14:00
பொங்கல் புத்தாடை தயாரிப்பில் சிக்கல்?...நெசவாளர்களின் கோரிக்கையை அரசு கேட்குமா?

இலவச வேட்டி, சேலை தயாரிப்பில் ஈடுபடவுள்ள லட்சக்கணக்கான நெசவாளர்கள் கூலி உயர்வு கேட்டு மூன்று மாதங்களுக்கும் மேலாக போராடிவரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டிய கைத்தறி துறை அதிகாரிகளோ அலட்சியம் காட்டிவருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை விநியோகிக்கப்படுமா எனும் கேள்வி எழுந்திருப்பது த.வெ.க. அரசுக்கு கடும் சவாலாக மாறியிருக்கிறது. 

இதுகுறித்து தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் பேசினோம். 'தென்காசி, சங்கரன்கோவில், சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இலவச வேட்டி, சேலை உற்பத்தியில் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் பல லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான வருமானம், தமிழக அரசால் தயாரிக்கப்படும் இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சீருடைக்குத் தேவையான துணிகளை உற்பத்தி செய்வது மூலம்தான் கிடைக்கிறது.

அதன்படி, வரும் 2027 பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் 225 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் இரண்டு மீட்டர் வேட்டிகள் மற்றும் ஒரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் சேலைகள் வழங்கப்படவுள்ளன. புதிய வடிவம் வண்ணம் மற்றும் உயர் தரத்தில் வழங்கப்படவுள்ள இந்த புத்தாடைகளுக்கான உற்பத்திப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இத்தகைய பணிகளில் ஈடுபடும் நெசவாளர்களுக்கு கடந்த 2014, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே கூலி உயர்வு வழங்கப்பட்டது. கடந்தாண்டு கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே உணவுப் பொருட்கள், விசைத்தறிக் கூடம் கிடங்கு வாடகை, மின்சாதன உபப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் கடும் நெருக்கடியில்தான் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவருகிறோம்.
இந்த நிலையில் இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கடந்த ஜூலை 1ம் தேதியே வெளியிடப்பட்டது.

அன்றே நெசவாளர்களுக்கான கூலியையும் உயர்த்தி வழங்க த.வெ.க. அரசுக்கு கோரிக்கை வைத்தோம். எங்களது கோரிக்கை மீது அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்தினார்கள். நொந்துபோன நெசவாளர்கள். ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்களை கடந்த ஆகஸ்ட்டில் இருந்து அவ்வப்போது நடத்திவருகிறோம்.

அதன்பிறகே மூன்று மாதங்கள் கழித்து, ஜவுளித்துறை கூடுதல் இயக்குநர் தமிழரசி, நெசவாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சேலம் சரகத்திற்கு உட்பட்ட துணை இயக்குநர் ஸ்ரீதரன் தலைமையில் குழுவை கடந்த செப்டம்பர் 10ம் தேதி அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். முந்தைய திராவிட இயக்க ஆட்சிகளின்போது மூன்றே முக்கால் மீட்டர் நீளம் கொண்ட இலவச வேட்டி நெசவுக்கு 24 ரூபாய் 60 பைசா கூலியாக வழங்கப்பட்டது.

அந்த வேட்டிகளின் அடர்த்திக் குறைவு என்பதால் அந்த கூலி ஏற்புடையதாக இருந்தது. ஆனால், தற்போது வேட்டியின் நீளம் 2 மீட்டராக குறைக்கப்பட்டாலும் அதன் அடர்த்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால் புதிய வேட்டி ஒன்றை நெசவு செய்ய 24 ரூபாய் 48 பைசாவும், 5.50 மீட்டர் சேலை ஒன்றுக்கு 56 ரூபாய் 23 பைசாவாகவும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்.

எங்கள் கூலி உயர்வு கோரிக்கையில் உள்ள நியாயத்தை அமைச்சர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் விளக்கியுள்ளோம். அதாவது, முந்தைய ஆட்சிக் காலங்களில் துணியின் தரத்தை பெரிதாக ஆட்சியாளர்கள் பார்க்கவில்லை. ஆனால் தற்போது வேட்டி, சேலைகளின் தரத்தில் புதிய அரசும், அதிகாரிகளும் கண்டிப்பு காட்டுவதால் வேட்டி, சேலை உற்பத்தியில் கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டியிருக்கிறது.

பகல். இரவு என 24 மணி நேரமும் நெசவு செய்தால்தான், வேட்டி, சேலைகளை தரமாக உற்பத்தி செய்ய முடியும். இன்றைக்கு ஒரு டீயின் விலையே 15 ரூபாயாக உயர்ந்துள்ளதுடன் அன்றாட செலவுகளும் அதிகரித்துவிட்ட நிலையில், கூலியை உயர்த்திக் கொடுக்க ஜவுளித்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது எந்த வகையில் நியாயம்? இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 612 கோடி ரூபாய் அதில், நெசவாளர்களின் கூலிக்கான செலவு மொத்தமாக இருபது சதவிகிதத்திற்குள்ளாகத்தான் வரும்போது அரசுக்கு ஏன் இதில் இத்தனை தயக்கம்?" என ஆதங்கத்துடன் கேட்டனர்.

இதற்கிடையே, துணை இயக்குநர் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த செப்டம்பர் 15ம் தேதி ஈரோட்டில் நெசவாளர்களை சந்தித்து, கூலி உயர்வு தொடர்பான கருத்துகளைக் கேட்டிருக்கிறார்கள். அப்போது 2025, 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாத கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கியிருக்கிறார்கள்.

அந்த மனுவில் முந்தைய ஆட்சிபோல் இல்லாமல் தற்போது நெசவாளர்களுக்கு கூடுதல் வேலை பளு ஏற்பட்டிருக்கிறது. வேட்டியின் அடமீர்த்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தறி இயக்கத்தை நிறுத்தி, ஊடுருவும் நூல் தாரை மாற்ற வேண்டும். சேலைகளுக்கு ஜரிகை பார்டர் சேர்க்கப்பட்டிருப்பதால், வேலைபளு அதிகரித்து ஒவ்வொரு நாளும் உற்பத்தி குறைந்துவிடும்.

அந்த வகையில் பழைய கூலியின்படியே உற்பத்தி செய்வது கடினம் இவ்விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் பெற கைத்தறி துறை கூடுதல் இயக்குநர் தமிழரசியை தொடர்புகொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பியும் பதில் வரவில்லை.

ஏ.சி. அறையில் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு நெசவாளர்களின் துயரம் எப்போது புரியும்?

(குமுதம் செய்திகளுக்காக தாரை இளமதி)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow