pahalgam terror attack: பஹல்காம் தீவிரவாத தாக்குதல்.. தற்போதைய நிலை என்ன? காஷ்மீர் விரையும் தமிழக அதிகாரிகள்

பஹல்காமில் நடைப்பெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி சவுதியிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார்.

Apr 23, 2025 - 11:35
pahalgam terror attack: பஹல்காம் தீவிரவாத தாக்குதல்.. தற்போதைய நிலை என்ன? காஷ்மீர் விரையும் தமிழக அதிகாரிகள்
pahalgam terror attack

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். செவ்வாய்க்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பைசரண் பகுதியில் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த போது இந்த பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. அரசாங்கம் சார்பில் இது உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் தப்பமுடியாது: பிரதமர் மோடி

சவுதி அரேபியாவிற்கு அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கேட்டறிந்ததும் இந்தியாவிற்கு திரும்பினார். சம்பவம் குறித்து கூறுகையில், "இந்த கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், அவர்கள் ஒருபோதும் தப்பமாட்டார்கள்" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  

முன்னதாக தனது சவுதி அரேபியா பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை இந்தியா வந்தடைந்த பிரதமர் மோடி , டெல்லி விமான நிலையத்திலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் கலந்துரையாடி தாக்குதல் சம்பவங்கள் குறித்த முழு விவரங்களை கேட்டறிந்தார்.

பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.

2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை:

பஹல்காமில் நடைப்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் நிலை என்ன?

”இக்கொடூரமான பயங்கரவாத சம்பவத்தில், தமிழகத்தை சார்ந்த 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 2 பேரின் உடல்நிலை சீராக உள்ளது. ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியிலுள்ள தமிழக அரசின் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உள்ளனர். தமிழக அரசின் சிறப்பு அதிகாரிகள் இன்று மாலைக்குள் காஷ்மீர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள்” என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். 

அவசர கட்டுப்பாட்டு அறை - ஸ்ரீநகர்: 0194-2457543, 0194-2483651; 7006058623; 24/7 சுற்றுலா உதவி மையம் - காவல் கட்டுப்பாட்டு அறை, அனந்த்நாக் 9596777669, 01932-225870, வாட்ஸ்அப்: 9419051940; ஜம்மு மற்றும் காஷ்மீர் சுற்றுலாத் துறை - 8899931010, 8899941010, 9906663868, 9906906115.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow