பிரதமர் மோடியின் வாரணாசி சென்டிமெண்ட்.. கங்கை தாயிடம் ஆசி பெற்று வேட்புமனு தாக்கல்
காசிக்கு சென்று, கங்கையில் குளித்து, பாவம் தொலைத்து, புண்ணியம் தேடும் பூமியாக கருதப்படும் வாரணாசியில், மூன்றாவது முறையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் பிரதமர் மோடி.
தாய் மண்ணான குஜராத்தில் போட்டியிடாமல், வாரணாசியில் ஏன் போட்டியிடுகிறார்? மோடிக்கும் வாரணாசிக்கும் என்ன தொடர்பு? வாரணாசியில் மோடிக்கான வரவேற்பு எப்படி உள்ளது? என்பதை பார்க்கலாம்.
இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைகள், அவர்களுக்கு செல்வாக்கு மிக்க புனித ஸ்தலங்களில் நின்று வெற்றி பெறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். காரணம், யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்திய அரசியல் சாசனம் மதச்சார்பற்ற நாடு என்று பதிவு செய்திருந்தாலும், இந்திய நாடு இந்து நாடாகவே காலம் காலமாக பெரும்பான்மையினரால் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் களத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களை கவர வேண்டுமெனில், வேட்பாளர்கள் இந்துக்களின் புனித ஸ்தலங்களில் போட்டியிட்டு, இந்து மத காப்பாளராக தங்களை நிலை நிறுத்திக் கொண்டால் மட்டுமே முடியும் என்பதை பட்டவர்த்தனமாக நிரூபித்தது, பாஜகவின் அபரிமிதமான வளர்ச்சி...
அதன் அடிப்படையிலேயே பாஜகவின் பிரதமர் வேட்பாளராக 2014ல் களமிறங்கிய மோடி, இந்துக்களின் முதன்மை புனித ஸ்தலமான காசி அமைந்துள்ள வாரணாசியில் போட்டியிட்டார்... பிறந்த ஊரிலும் சிவபெருமான், போட்டியிடும் ஊரிலும் சிவபெருமான் என்ற இந்து ஞான மரபின் ஆன்மீக உணர்ச்சி பரவசத்தில் மக்களை கொண்டு வந்ததால், 2 தொகுதியில் போட்டியிட்ட அவர் இரண்டிலும் வெற்றி பெற்றார்.
சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமாராக தேர்வு செய்யப்பட்டார். அந்த தேர்தலில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019-ல் மோடிக்கான செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்ததால், அந்த தேர்தலிலும் மோடியே வெற்றி பெற்று மீண்டும் பிரதமாரானார். 2019 ஆம் ஆண்டு வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, 4 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், ’எனது உடலில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும் காசியை வணங்குகிறது’என்று கூறி, காசி வாசிகளின் உள்ளுணர்வோடு கலந்துள்ள மோடி, மீண்டும் வாரணாசியில் போட்டியிட 3வது முறையாக தனது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அபிஜித் முகூர்த்தம் எனப்படும் அரிதான முகூர்த்தத்தில், அயோத்தி ராமர் கோயில் பிரான பிரதிஷ்டை மேற்கொண்டு, பிரான பிரதிஷ்டைக்கு நேரம் குறித்த ஞானேஷவர் சாஸ்திரி உள்ளிட்ட 4 பேர் வழிமொழிய, தனது வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி... முன்னதாக கங்கையில் பூஜை செய்த பிரதமர் மோடி, கங்கை தாய் தன்னை தத்தெடுத்துக் கொண்டதாக உணர்ச்சி பொங்க தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
சரி, ஏன் தனது சொந்த மாநிலத் தொகுதியை விடுத்து, வாரணாசியிலேயே போட்டியிட பாஜகவும், மோடியும் தீவிரம் காட்டுகின்றனர் என்றால், இந்தியாவில் அதிக மக்களவைத் தொகுதிகள் இருக்கும் மாநிலம் உத்தர பிரதேசமாகும்.. இந்த மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியால், மத்தியில் ஆட்சியை எளிதாக பிடிக்க முடியும்.... அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது, இந்துக்களின் புண்ணிய பூமியில் இருந்து நாட்டை காக்கும் பிரதமர் போட்டியிடுவது என, பாஜகவின் செல்வாக்கையும், மோடியின் செல்வாக்கையும் உயர்த்தும்... இதனாலேயே மோடி வாரணாசியை விட்டு வெளியேற விரும்பவில்லை என்று கூறப்படுகிறது..
தற்போது மூன்றாவது முறையாக வாரணாசியில் களமிறங்கும் பிரதமர் மோடியின் வெற்றி வாய்ப்பு என்பது, கடந்த தேர்தல்களைவிட அதிக அளவிலான வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?