SRH vs MI: கருப்பு நிற பட்டையுடன் களமிறங்கும் வீரர்கள்.. வானவேடிக்கை, சீயர்லீடர்ஸ் நடனத்திற்கு நோ
பஹல்காமில் நடைப்பெற்ற பயங்கரவாத சம்பவத்தினை தொடர்ந்து இன்றைய ஐபிஎல் போட்டியில், வானவேடிக்கை இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். செவ்வாய்க்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பைசரண் பகுதியில் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த போது இந்த பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. அரசாங்கம் சார்பில் இது உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பஹல்காமில் நடைப்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
ஒரு நிமிட மௌன அஞ்சலி:
இந்நிலையில் இன்று நடைப்பெற உள்ள மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் வானவேடிக்கை, சீயர்கேர்ள்ஸ் நடனம் இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பை மற்றும் ஹைதராபாத் அணி வீரர்கள், கள நடுவர்கள் உட்பட அனைவரும் கருப்பு நிற பட்டை அணிந்து விளையாடுவார்கள் எனவும், போட்டித் தொடங்கும் முன் ஒரு நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
What's Your Reaction?






