ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை.. வேடிக்கை பார்க்கும் அரசு

கடந்த  ஓராண்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து மொத்தம் 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை  தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Nov 26, 2024 - 14:05
ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை.. வேடிக்கை பார்க்கும் அரசு
ஆன்லைன் ரம்மியால் உயிரிழப்பு - ராமதாஸ் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனியைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி  இருந்த அருண்குமார், வேலைக்கு கூட செல்லாமல் மற்றவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார். 

சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாயை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் கடன் சுமையால் அருண்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வர முடியாது என்பதற்கு இது தான் கொடிய எடுத்துக்காட்டு ஆகும்.

பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது.  ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது. 

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர்  10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து  கடந்த  ஓராண்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து மொத்தம் 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட  தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.

தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 16 பேர் தற்கொலை  செய்து கொண்டுள்ள நிலையில்,  இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை  தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?  இந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை  விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து  ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow