வாக்குப்பதிவை புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்; அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் வாக்களிப்பு...
குடிநீர் தொட்டியில் தீண்டாமை செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை இதுவரை அடையாளம் காணாததை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மக்கள், மக்களவைத் தேர்தலை புறக்கணித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாலையில் வாக்களித்தனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சிலர் தீண்டாமை செயலில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்த மனித குலத்தில் இழிவான செயலாக பார்க்கப்பட்ட இந்த சம்பவம் நடந்து 15 மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கைவயல் கிராம மக்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்தாலாவது குற்றவாளிகளை கண்டுபிடிப்பது விரைவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வேங்கைவயல் மக்கள் எச்சரித்ததுபோல் தேர்தலை புறக்கணித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் அதிகாரிகள் வேங்கைவயல் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் ஒத்துழைப்பு தராததால் வாக்குப்பதிவு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பமும் நிலவியது.
இதன்பிறகு ஒருவழியாக நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு மாலை முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. உயர் அதிகாரியிடம் பேசி இந்த வாக்குப்பதிவு நேரம் நீடிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளின் பேச்சை நம்பி வாக்களித்த வேங்கைவயல் மக்களுக்கு நீதி கிடைக்குமா என்பதற்கு தமிழ்நாடு அரசே பதில் சொல்ல வேண்டும்.
What's Your Reaction?