ரயிலில் டன் கணக்கில் ரேசன் அரிசி கடத்தல்.. சுத்து போட்ட போலீஸ்.. சென்னை, கோவையில் சிக்கிய பெண்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் மூலம் கடத்தப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசியைக் கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை வாகன சோதனை நடத்தி கடத்தப்படும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரயில்கள் மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பல்வேறு ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பினாகினி ரயில் மூலம் விஜயவாடாவிற்கு கடத்தப்பட இருந்த 500 கிலோ ரேசன் அரிசியை ரயில்வே போலீசார் கைப்பற்றினர். மேலும், இதுதொடர்பாக 2 பெண்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் சோதனை செய்ததில் இருக்கைக்கு கீழே வைத்து கடத்தப்பட்ட 600 கிலோ ரேசன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து கடப்பா செல்லும் ரயிலில் 900 கிலோ ரேசன் அரிசி கடத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கோவை மதுக்கரை ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட இருந்த 200 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
What's Your Reaction?