ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தரத் தடை.. கூடங்குளம் அணு உலை மூடல்.. மதிமுக தேர்தல் அறிக்கை.. அள்ளி வீசிய வைகோ
நதிநீர் இணைப்பு, தமிழ்நாடு ஆறுகள் சுத்திகரிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தரத் தடை, கூடங்குளம் அணு உலையை மூடுதல் உள்ளிட்ட 74 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் களம் பங்குனி மாத வெயிலையும் தாண்டி அனல் பறக்கிறது. வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் துரை வைகோ. சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் உணர்ச்சி பொங்க வாக்காளர்களிடம் பேசி வருகிறார் வைகோ
இந்நிலையில், திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார். 74 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில், மாநில நலன் சார்ந்த பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு, தமிழ் ஆட்சி மொழி, திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல், மொழித் திணிப்பு எதிர்ப்பு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில், நதிநீர் இணைப்பு, தமிழ்நாடு ஆறுகள் சுத்திகரிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தரத் தடை, கூடங்குளம் அணு உலையை மூடுதல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம். தேசிய பசுமை தீர்ப்பாயம் மணல் அள்ளுவதற்கு விதித்துள்ள தடை உத்தரவை நடைமுறைப்படுத்திட வலியுறுத்துவோம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். கல்பாக்கம் ஈணுலையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 74 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி திருச்சி பொன்மலை இரயில்பெட்டி தொழிற்சாலை அமைத்திட துணைநின்று குரல் கொடுப்பேன். திருச்சி பெங்களூரு வந்தே பாரத் இரயில் இயக்கிடவும். திருச்சி கொச்சி பகல்நேர விரைவு ரயில் இயக்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசுடன் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் நாட்டின் அடையாளங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தை நலிவில் இருந்து மீட்கவும். இதனை நம்பி திருவெறும்பூர், துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதிகளில் இயங்கும் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர் - கந்தவர்க்கோட்டை- புதுக்கோட்டை - மதுரை புதிய அகல இரயில்பாதை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சிராப்பள்ளி ஆயூத உற்பத்தி தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை, கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை ஆகியவற்றை சீரமைத்து மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருவரங்கத்தில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைத்திட முயற்சி மேற்கொள்ளப்படும். தஞ்சாவூர் - கந்தவர்க்கோட்டை- புதுக்கோட்டை - மதுரை புதிய அகல இரயில்பாதை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்க, திருச்சி அரியமங்கலம். புதுக்கோட்டை திருவப்பூர்,கருவேப்பிலான் பகுதிகள் உட்பட தேவைப்படும் இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் இரயில்வே மேம்பாலங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
முந்திரி விளைச்சலுக்குப் பெயர் பெற்ற கந்தர்வக்கோட்டை, ஆதனக் கோட்டை பகுதிகளில் முந்திரி தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்படும். மதிப்புக் கூட்டப்பட்ட முந்திரியாக விவசாயிகளுக்கு கூடுதல் விற்பனை விலை கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பேன். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் தேங்கிக் கிடக்கும் நிதியினை திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார் வைகோ.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனி சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஆகவே தான் தீப்பெட்டியை தேர்ந்தெடுத்தோம் என்று வைகோ கூறினார்.
தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மோசடி செய்து விட்டது. சின்னம் ஒதுக்குவதில் 5.9 சதவீதம் வாக்குகள் இருந்தாலே 6 ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் பம்பரம் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் வேண்டும் என்றே தேர்தல் ஆணையம் செயல்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
What's Your Reaction?