செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 41வது முறையாக நீட்டிப்பு... சென்னை நீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 1ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இத்துடன் சேர்த்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 41வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jun 25, 2024 - 16:15
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 41வது முறையாக நீட்டிப்பு... சென்னை நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 41வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். 

கடந்த 2014 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் கடந்த ஆண்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு கடந்து விட்டது.

உடல்நிலை உள்பட பல்வேறு காரணங்களை கூறி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் தொடந்து தள்ளுபடி செய்து வருகின்றன. இதுவரை சுமார் 40 முறை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் அவரை சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக போலீசார் ஆஜர்படுத்தினார்கள். 

அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 1ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இத்துடன் சேர்த்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 41வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதில் அமலாக்கத் துறையின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம், ஆவணங்களை வழங்கக் கோரியை செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது. அதே வேளையில் அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி அல்லி 25ம் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளி வைத்திருந்தார்.

இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை ஜூலை 11ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுதவிர செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow