வாடகை விவகாரம்... யுவன் சங்கர் ராஜாவிடன் விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவு!
வாடகை விவகாரம் தொடர்பாக பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடன் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கி வரும் யுவன் சங்கர் ராஜா மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஃபஷீலத்துல் ஜமீலா என்பவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் போலீசில் கொடுத்த புகார் மனுவில், ''இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 'U1 records' ஸ்டுடியோவை எனக்கு சொந்தமான இடத்தில் வைத்துள்ளார். ஆனால் அவர் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்டுடியோ வாடகை கட்டணமான ரூ.20 லட்சத்தை செலுத்தவில்லை. ஆனால் வாடகை பணத்தை செலுத்தாமல், எங்களிடம் ஏதும் தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவை காலி செய்ய முயன்று வருகிறார். இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் அவர் வாடகை பணத்தை செலுத்தவில்லை. நான் துபாயில் இருக்கிறேன். வாடகை பணம் செலுத்தாதது குறித்து துபாயில் இருந்து யுவன் சங்கர் ராஜாவுக்கு எனது கணவர் போன் செய்தபோது அவர் பதில் அளிக்கவில்லை. மேலும் எங்களிடம் தெரிவிக்காமல் ஸ்டுடியோவை காலி செய்யும் யுவன் சங்கர் ராஜா, பீல்டிங்கின் கட்டமைப்பையும் சேதப்படுத்தியுள்ளார். ஆகவே யுவன் சங்கர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வீட்டு உரிமையாளர் ஃபஷீலத்துல் ஜமீலா தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பொய் புகார் கொடுத்துள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். மேலும் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு ஹஜ்மத் பேகமுக்கு தனது வழக்கறிஞர் மூலமாக யுவன் ஷங்கர் ராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், “யுவன் சங்கர் ராஜா மீது ஃபஷீலத்துல் ஜமீலா கொடுத்துள்ள பொய் புகார் செய்திகளிலும், டிவி சேனல்கள் வாயிலாகவும் வெளியாகி இருக்கிறது. இதை பல ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். மேலும் இந்த பொய் புகார் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவுக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் யுவன் சங்கர் ராஜா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஃபஷீலத்துல் ஜமீலா கொடுத்த பொய் புகாரை யுவன் சங்கர் ராஜா சட்டப்படி சந்திப்பார். யுவன் சங்கர் ராஜாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் புகார் அளித்த ஃபஷீலத்துல் ஜமீலா ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாடகை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே போலீசார் விளக்கம் கேட்க முடிவு செய்ததைத் தொடர்ந்து இன்று விசாரணை தொடங்கியது. அதில், “ஒவ்வொரு வருடமும் மொத்தமாக வாடகையை யுவன் சங்கர் ராஜா செலுத்தி வந்தார். ஆனால் இந்த ஆண்டிற்கான வாடகையை நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள ’GOAT’ பட ஆடியோ வெளியான பிறகு தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் அவர் வீட்டை காலி செய்ய முயன்றார்” என ஃபஷீலத்துல் ஜமீலா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ளப் போவதாக வழக்கறிஞர் நோட்டீஸ் அளித்த நிலையில் அவர் தரப்பு விளக்கத்தை போலீஸ் கேட்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?