“எனது விருதை அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்” - நித்யா மேனன் நெகிழ்ச்சி!
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தமிழில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் பெற்றுள்ளார்.
திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு 1954ம் ஆண்டிலிருந்து தேசிய விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதுகூடவே சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருதும் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் (ஆகஸ்ட் 16) மதியம் 1:30 மணியளவில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதுகளை மனிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் - 1’ படம் தட்டிச்சென்றது. மேலும் இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி பெற்றுள்ளார். தற்போது அறிவிக்கப்பட்ட விருதுடன் சேர்த்து இதுவரை 7 தேசிய விருதுகளை தனதாக்கியுள்ளார் ஏஆர் ரஹ்மான்(AR Rahman). இதன் மூலம் இந்தியாவில் இசையமைப்பாளராக அதிக தேசிய விருதுகளை(Most National Awards Winner) வென்று சாதனை படைத்துள்ளார். அதாவது மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படம் மூலம் அறிமுகமான ஏஆர் ரஹ்மானுக்கு, முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து சிறந்த நடிகருக்கான விருதை ‘காந்தாரா’ படத்திற்காக ரிஷப் ஷெட்டி வென்றுள்ளார். மம்மூட்டிக்கும் ரிஷப் ஷெட்டிக்கும் கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் இறுதியாக ரிஷப் ஷெட்டி வெற்றி பெற்றார். இதுமட்டுமில்லாமல் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாகவும் ‘காந்தாரா’ தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
இதே போல சிறந்த நடிகைக்கான விருதுக்கு இருவருக்கு நடுவே போட்டி நிலவி வந்தது. தமிழ் படமான திருச்சிற்றம்பலத்திற்காக நித்யா மேனனும் குஜராத் படமான குட்ச் எக்ஸ்பிரஸிற்காக மானசியும் போட்டியில் இருந்தனர். ஆனால் இறுதியில் எதார்த்தமான நடிப்பிற்காக நித்யா மேனன் வெற்றிப்பெற்றார். இதுமட்டுமில்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மேகம் கருக்காதா...’ பாடலுக்காக சிறந்த நடன இயக்குநர் விருதை ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் தட்டிச் சென்றுள்ளனர்.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வெறும் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனை பெற்று சாதனை படைத்தது. நண்பர்களாக இருக்கும் இருவரிடையே எப்படி காதல் மலர்ந்தது என்ற எதார்த்தமான கதைக்களம் கொண்ட இப்படம், தற்போதைய இளைஞர்களுடன் கனெக்ட் ஆனதே இப்படத்தின் வெற்றிக்கு முதன்மையான காரணமாக அமைந்தது.
மேலும் படிக்க: வெளிநாட்டில் தென் இந்திய சினிமாவை புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான்
சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறித்து பேசிய நித்யா மேனன், “‘திருச்சிற்றம்பலம்’ படம் மக்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்தது. இந்த தேசிய விருதை எனக்கு மிகவும் பிடித்த தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன். எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு” என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?