கோவை நகைக்கடையில் கொள்ளை சம்பவம்- கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான  தனிப்படையினர், இன்று நகைக்கடையில் விசாரணை தொடர்ந்தனர்.

Nov 29, 2023 - 15:17
Nov 29, 2023 - 17:04
கோவை நகைக்கடையில் கொள்ளை சம்பவம்- கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடித்த நபர், பழைய குற்றவாளிகள் பட்டியலில் இல்லை என தெரியவந்துள்ளது.120க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த தனிப்படையினர், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த நபர்,  200 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்ப ரீதியில் விசாரணை நடைபெற்று வருவதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கடைக்குள் புகுந்த அந்த மர்ம நபர், கண்காணிப்பு கேமராவை பார்த்தவுடன் சட்டையை கழட்டி முகத்தை மூடியது கேமராவில் பதிவாகி இருந்தது.
எந்தவித பதட்டமும் இல்லாமல், ஒவ்வொரு நகையாக தேர்வு செய்து கொள்ளையடித்துச் சென்றது புதுவிதமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நகை கடையில் கொள்ளை நடந்த நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை, அப்பகுதியில் இயக்கத்தில் இருந்த செல்போன் சிக்னலை வைத்து சைபர் கிரைம் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். 100 அடி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையடித்த நகைகளை பையில் எடுத்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி சென்றது கேமராவில் பதிவாகி உள்ளது.

ஆட்டோ சென்ற வழித்தடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, உக்கடம் பேருந்து  நிலையம் வரை ஆட்டோ சென்றது தெரியவந்துள்ளது. கொள்ளையன் பயணித்த ஆட்டோ குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நள்ளிரவு நேரத்தில் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் பட்டியலை தயாரித்துள்ள தனிப்படையினர், ஓட்டுநர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

உக்கடத்திலிருந்தும் கிளம்பும் பேருந்துகள் பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி மார்க்கத்தில் செல்லும்.அந்தந்த பகுதி  காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருவதாக தனிபடையினர் தெரிவித்தனர்.கொள்ளையன் நகைகளை தேர்வு செய்யும் விதத்தை பார்த்தால், திருமணத்திற்கு தேவையான செயின், தாலி, மோதிரம், வளையல், ஒட்டியானம், கம்மல் போன்ற நகைகளை அதிகமாக திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கொள்ளையடிப்பது பிரதானமாக  நோக்கமாக இல்லாமல், திருமணம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் கணித்துள்ளனர்.உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான  தனிப்படையினர், இன்று ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் விசாரணை தொடர்ந்தனர்.

ஏற்கனவே நகை கடையில் வேலை பார்த்து பணியில் இருந்து சென்றவர்கள் பட்டியல் மற்றும் அவர்களது புகைப்படங்களுடன், கொள்ளையன் புகைப்படம் ஒப்பிட்டு பார்க்கும் பணி நடைபெறுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை, கட்டுமான புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.இந்த பணி செய்த ஒப்பந்ததாரர் மற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.விரைவில் கொள்ளையனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow