விஐபி-ஐ கொல்ல ஸ்கெட்ச்... ஸ்கெட்ச்சுக்கே ஸ்கெட்ச் போட்ட போலீஸ்... சென்னையில் துப்பாக்கி முனையில் 17 ரவுடிகள் கைது
கள்ளத்துப்பாக்கிகள், 84 துப்பாக்கி குண்டுகள் மற்றும் 5 சொகுசு கார்கள் பறிமுதல்.
சென்னையில் நள்ளிரவில் நட்சத்திர விடுதியில் ஒன்று கூடிய ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பாம் சரவணன் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீப காலமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த பாம் சரவணனை அதிதீவீர குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருமங்கலத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு பாம் சரவணன் வந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் நட்சத்திர விடுதியை சுற்றி வளைத்து துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த போலீசாருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
தமிழகத்தில் ஏ ப்ளஸ் கேட்டகிரியில் உள்ள அதிபயங்கர ரவுடிகள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்துள்ளனர். போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்த ரவுடிகள் அனைவரும் நாலாபுறமும் தப்பித்து ஓடிய நிலையில், துப்பாக்கி முனையில் 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 கள்ளத்துப்பாக்கிகள், 84 துப்பாக்கி குண்டுகள் மற்றும் 5 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களை பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்கள் அனைவரும் பாம் சரவணனின் கூட்டாளிகள் என்பதும், கடந்த ஆண்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆற்காடு சுரேஷை கொலை செய்த ஒத்தக்கண்ணு ஜெயபால் (64) மற்றும் முகமது அலி, ஈசிஆர் பிரசன்னா, ஜீவா, முத்துகுமார், சுரேஷ் உள்ளிட்ட 17 பேரும் சரித்திர பதிவேடு ரவுடிகள் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரை கொலை செய்ய ஸ்கெட்ச் போடுவதற்காக அனைவரும் ஒன்று கூடியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி தம்புராஜ், தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு துப்பாக்கி விநியோகம் செய்து வருவது தெரியவந்ததையடுத்து உடனடியாக தம்புராஜை அசோக் நகரில் வைத்து சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். தம்புராஜிடம் நடத்திய விசாரணையில் அவர் மீது கொலை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. ரெட்ஹில்ஸ் பகுதியில் யாரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினர் என்பது குறித்து ரவுடிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் நட்சத்திர விடுதியில் 40-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கொலை செய்ய திட்டமிடுவதற்காக கூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?