நாதகவில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நிர்வாகிகள் - அப்செட்டில் சீமான்

தலைவரின் வழியில் தமிழ் தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Nov 19, 2024 - 12:35
நாதகவில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நிர்வாகிகள் - அப்செட்டில் சீமான்

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் மேலும் ஒரு  பொறுப்பாளர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர். 

இவர்களைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோரும், அவர்களின் ஆதரவாளர்களும் அக்கட்சியில் இருந்து விலகியது நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் என்கிற தங்கதுரை அக்கட்சியில் இருந்து விலகுவதாக தனது முகநூலில் நேற்று பதிவு செய்திருந்தார்.

இதனிடையே இன்று நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணியின் சேலம் மாவட்ட செயலாளர் வைரம் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.மேலும் தலைவரின் வழியில் தமிழ் தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருச்சி மாவட்டங்களை தொடர்ந்து சேலத்திலும் அதன் நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய நிர்வாகிகள் நாதகவில் இருந்து தொடர்ந்து விலகி வருவதால் சீமான் கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நிர்வாகிகள் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, இங்கே சர்வதிகாரம் இருக்கிறது என்றால், சர்வதிகாரம் இல்லாத இடத்திற்கு செல்லுங்கள் என்றார். மேலும் கட்சி என்றால் கொள்கையும், கோட்பாடுகளும், கட்டுபாடுகளும் இருக்கத்தான் செய்யும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow