LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு- இபிஎஸ் கண்டனம்

எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது

Nov 19, 2024 - 13:33
LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு- இபிஎஸ் கண்டனம்

LIC இணையதளத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

LIC நிறுவனத்தின் இணையதள முகப்பு பக்கம் இன்று காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மேலும் மொழி என்பதை குறிக்கும் பாஷா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்ஐசி நிறுவனத்தின் இணையதள பக்கம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதாக எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் எல்ஐசி இணையதள முகப்பு பக்கம் இந்தி மொழிக்கு மாறியதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,  “ பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.

எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow