சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக அஜந்தா மேம்பாலம் இடிக்கப்பட்டது !

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக இரண்டு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கப்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூரை இணைக்கும் அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கி உள்ளது.

Jan 23, 2024 - 12:50

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக இரண்டு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கப்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூரை இணைக்கும் அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கி உள்ளது.

மெட்ரோ பணிக்காக சென்னையில் 2 முக்கிய மேம்பாலங்களான அடையாறு, அஜந்தா பாலங்கள் இடிக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைய உள்ளது.

இந்நிலையில்  உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இந்த திட்டம் 2026ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில், ஊதா வழித்தடமான மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கி.மீ. வழித்தடம், மூன்றின் ஒரு பகுதியான அடையாறு சந்திப்பில் நிலத்தடி மெட்ரோ நிலையம் அமைக்க உள்ளது. இதில் கிரீன் வேஸ் சாலை மற்றும் அடையாறு சந்திப்பு ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் அடையாறு ஆற்றின் கீழ் இரட்டை சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் இதற்காக எல்.டி என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, நீருக்கு அடியில் மண் பரிசோதனை உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கிரீன் வேஸ் சாலை மற்றும் அடையாறு டிப்போ நிலையங்களை ஓஎம்ஆர் சாலைக்கு செல்ல இணைக்கும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது.  அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதிக்கு கீழ் இரட்டை சுரங்கப்பாதைகள் மற்றும் அடையாறு சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதால் அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி மெட்ரோ பணிக்காக முக்கிய மேம்பாலங்களான அடையாறு மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை - ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள அஜந்தா மேம்பாலம் இன்று  இடிக்கப்பட்டு உள்ளது. இடிக்கப்படும் இடங்களில் மெட்ரோ பணிகள் முடிந்த பிறகு மீண்டும் பாலங்கள் அமைக்கப்படும். மேம்பாலங்கள் இடிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கட்டப்படும். இதன் மூலம் அடையாறு சந்திப்பில் 4 வழிச்சாலை மேம்பாலம் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம்  அறிவித்துள்ள அறிவிப்பில், ‘‘அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்படுவதால் போக்குவரத்து சீர் செய்ய, இருவழியாக மாற்றப்பட உள்ளது. தொடக்கத்தில் பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு தற்காலிகமாக இரும்புப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தற்காலிக பாலத்தை கட்டி அகற்றுவதில் எந்த பயனும் இல்லை என்பதாலும் இது கான்கிரீட் பாலத்தை விடவும் செலவு அதிகம். ராதாகிருஷ்ணன் சாலை முதல் ராயப்பேட்டை சந்திப்பில் ராயப்பேட்டை நோக்கி செல்லும் அஜந்தா மேம்பாலத்தின் 50 சதவீத பகுதி இடிக்கப்படும். மேம்பாலம் அகற்றப்பட்ட பிறகு அங்கு போக்குவரத்து பாதையை மாற்றும் திட்டம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தற்காலிகமாக பேருந்துகள் அனைத்தும் அவ்வை சண்முகம் சாலை வழியாக மாற்றப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow