வெளியானது UPSC சிவில் சர்வீசஸ் ரிசல்ட்.. முதலிடம் பிடித்த சக்தி துபே யார்?

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியா அளவில் முதலிடத்தை பெற்று அசத்தியுள்ளார் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சக்தி துபே.

Apr 22, 2025 - 17:52
வெளியானது UPSC சிவில் சர்வீசஸ் ரிசல்ட்.. முதலிடம் பிடித்த சக்தி துபே யார்?
shakti dubey has topped the upsc cse final results

இந்தியாவின் மிக உயரிய அரசு அலுவலக பொறுப்புகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க மத்திய அரசால் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 2024- ஆம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த சக்தி துபே. அலகாபாத் பல்கலைக்கழகத்ஹ்டில் இளங்கலைப் பட்டம் பெற்ற சக்தி துபே, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை காவல் துறையில் பணியாற்றி வருகிறார். கல்லூரி காலம் முதலே பொது சேவை ஆற்றும் வகையில் அரசுப்பணியில் சேர வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார்.

தனது நீண்ட கால கனவினை எட்டியுள்ள சக்தி துபேவுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடமும் பெண் தான். ஹர்ஷிதா கோயல் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இரண்டு இடங்களை பெண்கள் பிடித்து அசத்தியுள்ளதை போல், தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களும் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் மிகச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளனர்.

நான் முதல்வன் திட்டம்:

நான் முதல்வன் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 23ம் இடமும், தமிழ்நாட்டு தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இதேபோல் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மோனிகா அகில இந்திய அளவில் 39வது இடத்தை பெற்றுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 134 பேர் பயிற்சி பெற்ற நிலையில் 50 பேர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய இருவர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுக்குறித்து தமிழக முதல்வர் கூறுகையில், “பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என்னை மகிழ்ச்சியாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow