ஷேக் ஷாஜகானை CBI இடம் ஒப்படைக்க மாநிலஅரசு மறுப்பு.. என்ன நடக்கிறது மேற்குவங்கத்தில்?

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகானை CBI இடம் ஒப்படைக்க மாநில அரசு மறுத்துள்ளது.

Mar 6, 2024 - 08:51
ஷேக் ஷாஜகானை CBI இடம் ஒப்படைக்க மாநிலஅரசு மறுப்பு.. என்ன நடக்கிறது மேற்குவங்கத்தில்?

மேற்குவங்கத்தில் ஊழல் வழக்கு தொடர்பாக சோதனையிடச் சென்ற அதிகாரிகளை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகானின் கூட்டாளிகள் அடித்து விரட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தப்பியோடிய அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேஷ்காலியில் பழங்குடி மக்களிடம் நிலஅபகரிப்பு செய்து, பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் 55 நாட்களுக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து ஷேக் ஷாஜகானை நீக்குவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது. 
 
இதுதொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாநில காவல்துறை முழுக்க முழுக்க ஒருபக்க சார்புடன் நடந்து கொண்டதாக நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். ஷேக் ஷாஜகானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து நேர்மையான, நியாயமான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கூறி CBI-இடம் வழக்கை மாற்றினர். தொடர்ந்து மாலை 4.30 மணிக்குள் ஷேக் ஷாஜகானை CBI வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக மேற்குவங்க அரசு தெரிவிக்கவே, வெறுங்கையுடன் CBI திரும்பினர். தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்க மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தை வலியுறுத்திய கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow