டென் ஹவர்ஸ்- திரை விமர்சனம்: பரபரப்பான 3 கதைகளுக்கு நடுவே போலீஸ் உடையில் சிபிராஜ்
டென் ஹவர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிய நிலையில் படம் குறித்த குமுதம் விமர்சனம் காண்க.

டுவின் ஸ்டியோஸ் தயாரிப்பில், கடந்த வாரம் திரையில் வெளியான திரைப்படம் டென் ஹவர்ஸ். சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பல புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளன. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாஸிட்டிவ் விமர்சனம் கிடைத்துள்ள நிலையில், குமுதம் விமர்சனம் இதோ...
தன் மகளைக் காணவில்லை என்று தாய் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். அதை விசாரிக்கச் செல்லும் இன்ஸ்பெக்டர் சிபிராஜ், அடுத்த 10 மணி நேரத்தில் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார், அந்தப் பெண்ணை அவர் கண்டு-பிடித்தாரா என்பதுதான் கதை.
இது தவிர, இன்னும் இரண்டு முக்கியமான கதைகளும் படத்தில் இருக்கின்றன. அந்த மூன்றையும் இணைத்து இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் அமைத்திருக்கும் திரைக்கதைதான் படத்தின் சிறப்பு. அதுமட்டுமல்ல, அந்தத் திரைக்கதையில் மர்டர், மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ் என மூன்று விதமான ஜானர்களையும் கொண்டு வந்திருப்பது புத்திசாலித்தனம்.
கோயம்பேட்டில் இருந்து கோவைக்குப் புறப்படும் ஆம்னி பஸ், கள்ளக்குறிச்சி வருவதற்குள் பஸ்ஸில் ஒரு கொலை... அந்தக் கொலையைச் செய்தது யார் என்று கண்டுபிடிக்க சிபிராஜ் செய்யும் விசாரணைகளைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள், கணிக்க முடியாததாக இருப்பது சிறப்பு. ஆனால், காட்சிகள்தான் பழசு. ஐயப்பன் கோயிலுக்குப் போகும் காஸ்ட்யூமில், நெற்றியில் பட்டையுடன் அதிரடி இன்ஸ்பெக்டராக நடிப்பில் அசத்துகிறார், சிபிராஜ்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் எல்லாம் அறிமுகம் அதிகம் இல்லாதவர்கள் என்றாலும், நன்றாகவே நடித்திருக்கின்றனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் காட்சிகளை ஓரளவு காப்பாற்றி இருக்கின்றன.ஆம்னி பஸ் கோயம்பேட்டில் இருந்து கிளம்புவதை 10 தடவை காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம். தவிர, காட்சிகள் பல நம்பும்படி இல்லை. ஒரே நம்பர் பிளேட்டில் இரண்டு பஸ்கள் அடுத்தடுத்து வருவது, ஓட்டு மெஷினுடன் அதிகாரி ரோட்டில் நிற்பதெல்லாம் லாஜிக்கே இல்லை.
மொத்தத்தில் ‘டென் ஹவர்ஸ்’ & மெல்ல நகர்கிறது!
What's Your Reaction?






