நாங்கள்-திரை விமர்சனம்: ராட்சசனாக வலம் வரும் அப்பா..சிக்கித்தவிக்கும் 3 சிறுவர்கள்
நாங்கள் திரைப்படம் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிய நிலையில் படம் குறித்த குமுதம் விமர்சனம் காண்க.

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில், கடந்த வாரம் திரையில் வெளியான திரைப்படம் நாங்கள். சிறுவர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பல புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளன. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாஸிட்டிவ் விமர்சனம் கிடைத்துள்ள நிலையில், குமுதம் விமர்சனம் இதோ..
சிங்கிள் பேரன்டிங்கில் உள்ள சிக்கல்களை யதார்த்தமாக சொல்லும் படம்தான் 'நாங்கள்'. ஒரு கொடூரமான அப்பாவிடம் வளரும் மூன்று சிறுவர்களைப் பற்றிய கதைதான் 'நாங்கள். பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டையும் பெற்ற படம்.
தமிழ்ப் படங்களில் வரும் அப்பாக்கள் பெரும்பாலும் அன்பானவர்களாகவோ, தியாகிகளாகவோதான் இருப்பார்கள். ஆனால், இயக்குநர் அவினாஷ் பிரகாஷ், அப்பாவை ஹிட்லர் ரேஞ்சுக்கு காட்டியிருப்பது துணிச்சல்தான். கண்டிப்பான தந்தையாக அப்துல் ரபே அசத்துகிறார். தன் மூன்று பையன்களையும் அவர் தினமும் உரிச்சி உப்புக் கண்டம் போடாததுதான் குறை. மகன்களாக வரும் மிதுன், ரித்திக், நிதின் மூவரும் அற்புதமாக நடித்திருக்கின்றனர்.
வறுமையில் வாடும் தாய்:
அப்பாவின் அடி தாங்காத அவர்கள், கேரளாவில் வாழும் தங்களின் தாய் பிரார்த் தனாவைத் தேடிச் செல்வதும், அங்கு அவரது வறுமையான வாழ்க்கை சூழலைப் பார்த்ததும் அதற்கு அப்பாவின் அடக்குமுறையே மேல் என்று அப்பாவிடமே திரும்பி வருவதும் எதிர்பாராதது. தினமும் சித்திரவதை அனுபவிக்கும் குழந்தைகளுக்காக பிடிக்காத கணவரைத் தேடிவரும் பிரார்த்தனாவை, சைக்கோ கணவர் ஏற்றுக் கொண்டாரா? இறுதியில் குழந்தைகள் வாழ்க்கையில் திருப்பு முனையாக என்ன நடந்தது? என்பதுதான் கிளைமேக்ஸ்.
இயக்குநரே ஒளிப்பதிவாளர் என்பதால், ஃபிரேமிங் பிரமாதமாக இருந்தாலும், காட்சிகள் கொஞ்சம் செயற்கை. வேத் ஷங்கர் சுகவனத்தின் இசை ஓகே. அப்துல் ரபே ஏன் குழந்தைகளை அவ்வளவு கொடூரமாக நடத்துகிறார் என்பதற்கு அழுத்தமான காரணங்கள் இல்லை. காட்சிகளில் உணர்ச்சிகளைவிட லாஜிக்கே துருத்திக் கொண்டு நிற்ப தால் கொஞ்சம் அந்நியமாகவும் தெரிகிறது. மொத்தத்தில் 'நாங்கள்' - குழந்தைகளின் குரல்!
Read more: டென் ஹவர்ஸ்- திரை விமர்சனம்: பரபரப்பான 3 கதைகளுக்கு நடுவே போலீஸ் உடையில் சிபிராஜ்
What's Your Reaction?






