முதலமைச்சர் நிகழ்வு... குழந்தைகளையும் விட்டுவைக்காத சோதனை?
காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், அவர் வருவதற்கு முன்பு பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர் காலை உணவுத் திட்டம் முதலில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கவும், இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி கற்கும் சூழலை உருவாக்கவும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தார். இதன் மூலம் 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 19.34 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.
தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. "காமராஜர் காலை உணவுத் திட்டம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
இதனை முதலமைச்சர் விஜய் திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கலை பரிமாறிய விஜய், பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இந்தத் திட்டத்திற்காக கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 34.64 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.
இந்தத் திட்டம் பெற்றோர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. அவசர அவசரமாக குழந்தைகளை காலையில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், இனி அவர்கள் உணவு சாப்பிட்டார்களா என்ற கவலையில் இருக்க வேண்டியதில்லை என தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் விஜய் வருவதற்கு முன்பாகவே மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள், மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்தது சரியா? என பொதுமக்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
What's Your Reaction?