பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம், சமூக நீதி உள்ளிட்டவற்றை குழிதோண்டி புதைத்து விடுவார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி முதலில் செய்தித்தாள்களை படித்துவிட்டு வந்து பேச வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரத்தில் திமுக சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தேனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் என்பது இருக்காது என்றும், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இருக்காது. தேர்தல் என்பது ஜனநாயக பூர்வமாக இருக்காது. மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. சட்டமன்றங்கள் இருக்குமா என்பதே சந்தேகம் தான்" என்றார்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே உணவு என ஒற்றை சர்வாதிகாராக மாற்றிவிடுவார்கள். சமூக நீதி என்பதை குழி தோண்டி புதைத்து விடுவார்கள். தேர்தலுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த பிரதமர் மோடி, தேர்தல் காரணமாக தற்போது, உள்நாட்டில் சுற்றுலா செல்கிறார். சென்னை தியாகராய நகரில் பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோ, ஃபிளாப் ஷோ ஆகிப்போனது" என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மத்தியில் ஆண்ட அரசுகளுடன் 14 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த திமுக என்ன செய்தது என கேள்வி எழுப்பியிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பலமுறை பதில் கூறியிருக்கிறேன். முதலில் அவர் செய்தித்தாள்களை படித்துவிட்டு வந்து பேச வேண்டும். மத்திய அரசுடன் அதிமுக கூட்டணி அமைத்தால், சுயநலத்திற்கு பயன்படுத்தும்.மத்திய அரசுடன் திமுக கூட்டணி அமைத்தால் மாநிலத்தின் நலனுக்காக பயன்படுத்தும்" என கூறினார். மேலும், "அதிமுக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தால் 2 விஷயங்களை மட்டுமே செய்வார்கள். ஒன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தால் அதனை கலைக்க சொல்வார்கள். இல்லையென்றால் தங்கள் மீதான ஊழல் வழக்குகளை வாபஸ் பெறச் சொல்வார்கள்" என குறிப்பிட்டார்.
What's Your Reaction?