முதல்வர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்.. மருத்துவர்கள் கூறிய அறிவுறுத்தல்!
தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பியுள்ளார்.

கடந்த ஜூலை 21 ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுத்தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியினை மேற்கொண்டிருந்த போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அதுத்தொடர்பாக பரிசோனை மேற்கொள்வதற்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருக்கு தேவையான நோயறிதல் பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என குறிப்பிடப்பட்டிருந்தது.
மருத்துவமனையில் இருந்தபடியே, அரசின் சார்பில் தொடங்கப்பட்ட ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். அரசின் கோப்புகளிலும் கையெழுத்திட்டதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் Dr.G செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 24 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது.
இந்நிலையில், உடல்நலம் தேறி வந்த முதல்வர் இன்று மாலை வீடு திரும்பினார். இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அப்பல்லோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதலமைச்சர் இன்று மாலை இல்லம் திரும்ப உள்ளார்கள். முதலமைச்சர் நலமாக இருக்கின்றார்கள். மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வீடு திரும்பியுள்ள நிலையில், திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
What's Your Reaction?






