உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக்: 39 பந்தில் சதம்.. விண்டேஜ் ஏபிடி ரிட்டன்!
நடைப்பெற்று வரும் உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 39 பந்தில் சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்.

ஜூலை 18 ஆம் தேதி தொடங்கிய உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் போட்டி என்பதால், இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவியது.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இன்றையத் தினம், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஓய்விலிருந்த தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ஏபிடி மீண்டும் களத்திற்கு திரும்பினார். தனது கம்பேக்கினை யாரும் மறக்கமுடியாத அளவிற்கு ஒரு ஆட்டத்தை ஆடிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தொடக்க வீரராக களமிறங்கிய ஏபிடி தான் சந்தித்த முதல் பந்திலிருந்தே அதிரடியாக தான் ஆடத்தொடங்கினார்.
ப்ரட் லீ, சிட்டில், ஹேஸ்டிங்க்ஸ், கிரிஸ்டியன் என ஆஸ்திரேலிய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் திணறடித்தார். 39 பந்தில் சதமடித்து அசத்தினார். இவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மூட்ஸ் ஏபிடிக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்க இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 187 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய ஏபிடி வில்லியர்ஸ் 46 பந்துகளில் 123 ரன்களை குவித்த நிலையில் சிட்டில் பந்து வீச்சில் அவுட்டாகினார். இதில் 15 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின் களமிறங்கிய வீரர்கள் ரன்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவே திணறிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 241 ரன்களை குவித்து அசத்தியது தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி. ஆஸ்திரேலியா தரப்பில் சிட்டில் அதிகப்பட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமாக இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே ரன்கள் குவிக்க முடியாமல் திணறியது. எந்த வீரர்களும் நிலைத்து ஆடாத நிலையில் 16.4 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலையில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்தியா அணி தற்போது வரை எந்த போட்டியிலும் வெற்றிப்பெறவில்லை. தொடரின் இறுதிப்போட்டி ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






