ஆவினுக்கு பெப்பே.. நந்தினிக்கு பொக்கே: பால்வளத்துறையின் போங்கு ஆட்டம்!

கர்நாடக அரசின், பால் கூட்டுறவு அமைப்பான 'நந்தினி', அடுத்த 6 மாதங்களில் சுமார் 500 நந்தினி பாலகங்களை தமிழகத்தில் அமைத்துவிட வேண்டும் என நந்தினி நிறுவன அதிகாரிகள் இடம் தேடி வருகின்றனர்.

ஆவினுக்கு பெப்பே.. நந்தினிக்கு பொக்கே: பால்வளத்துறையின் போங்கு ஆட்டம்!
tamilnadu dairy policy under scrutiny as nandini expands

சட்டசபையில், பால்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது. 'புதியதாக 500 ஆவின் பாலகங்கள் தமிழகத்தில் தொடங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தற்போது, கர்நாடகவின் நந்தினி பாலகங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, ஆவின் பாலகங்களுக்கு 'எண்ட் கார்டு' போடும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது தமிழக அரசு!

இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் என்பது ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்வதோடு, இதர மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்யக்கூடிய இடமாக இருக்கும். இவ்வகையான பாலகம் அமைக்க குறைந்தபட்சம் 64 சதுர அடி முதல் 225 சதுர அடி வரையிலான இடம் போதுமானது. பேருந்து நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் இந்த நிலையங்கள் அமைக்கப்படும்.

தமிழகத்திலுள்ள ஆவின் பாலகங்கள்:

இதில், ஆவின் நிறுவனப் பால் உபபொருட்களுக்கு குறைந்தபட்சம் 8 % முதல் 18 % வரை கமிஷன் வழங்கப்படும். இவ்வாறு வெண்ணெய், நெய், தயிர், ஜஸ்கிரீம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரிக்கப்பட்டு, ஆவின் பாலகங்கள் மற்றும்  சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 800 சிறிய ஆவின் பாலகங்களும், சுமார் 200 பெரிய ஆவின் பாலகங்களும் உள்ளன. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் சிறிய பாலகங்களும், 12 ஆயிரம் பெரிய பாலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இவ்வகை ஆவின் பாலகங்கள் நடத்துவோருக்கு குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால், ஆவின் பால் உள்ளிட்ட அதன் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வதில் பாலகங்களுக்கு இடையே கடும் போட்டி உள்ளது. போதாக்குறைக்கு ஆவின் பாலகம் போன்று தனியார் பால் நிறுவனங்களும் பாலகங்கள் அமைக்கின்றன. இதனால், தனியார் பால் நிறுவனங்களின் போட்டியையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஆவின் பாலகங்களுக்கு உள்ளது.

இந்நிலையில்தான், தற்போது, கர்நாடக அரசுக்குச் சொந்தமான நந்தினி பாலகங்களுக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்டு வருவது, ஆவின் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசின், பால் கூட்டுறவு அமைப்பு, 'நந்தினி' எனும் பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை அந்த மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

இந்த நந்தினிக்குப் போட்டியாக, பிரபல அமுல் நிறுவனம் கர்நாடகாவுக்குள் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த முயன்றபோது, 'நந்தினியைக் காப்போம்' என கர்நாடக மக்கள் ஆதரவுப் பிரசாரத்தில் குதித்தனர். நந்தினி பாலகங்களுக்குச் சென்று நந்தினி பால் பொருட்களை வாங்கி செல்பி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து அமுல் நிறுவனத்திற்கு 'டஃப்' கொடுத்தனர்.

இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த 'நந்தினி' நிறுவனம்தான் தற்போது, தமிழகத்தில் தன் வேரை பரப்பத் தொடங்கியிருக்கிறது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனது முதல் கிளையை நிறுவியது நந்தினி. இத்தனைக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் ஏற்கெனவே ஆவின் பாலகம் உள்ளது. ஆனால் அதைப் பற்றி துளியும் யோசிக்காமல், பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியிலேயே நந்தினி பாலகம் அமைக்க அனுமதி அளித்திருக்கிறது தமிழக போக்குவரத்துத்துறை.

6 மாதங்களில் 500 நந்தினி பாலகங்கள்:

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம், சென்னை புரசைவாக்கத்தில் நந்தினி நிறுவனம் இன்னொரு பாலகத்தைத் திறந்துள்ளது. மேலும், சென்னை பாரிமுனையிலும் நந்தினி பாலகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் திறப்பு விழா காணவுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு நிறுவனங்கள் இயங்கும் வளாகங்களையும் நந்தினி நிறுவனம் கண் வைத்துள்ளது. இங்கேயும் நந்தினி பாலகங்கள் அமைக்க அனுமதி வழங்குமாறு, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், கர்நாடக நந்தினி நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக, ஆவின் பாலகங்களின் விற்பனை எங்கெல்லாம் அமோகமாக உள்ளது என நந்தினி நிர்வாகம் கணக்கெடுத்து அந்த இடங்களில் எல்லாம் நந்தினி பாலகங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நந்தினி பாலகம் அமைக்க வேண்டும் என இலக்கும் நிர்ணயிக்கப்பட்டு வேலை நடந்துவருகிறது. அடுத்த 6 மாதங்களில், சுமார் 500 நந்தினி பாலகங்களை அமைத்துவிட வேண்டும் என நந்தினி நிறுவன அதிகாரிகள் தமிழகத்தில் இடம் தேடி வருகின்றனர்.

இவை எல்லாம் நடந்தால் ஆவின் நிறுவனம் கடும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் பால்வனத்துறைக்கு மூன்று அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை அமைச்சர்களின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்லாமல் விட்டுவிட இதுவும் முக்கிய காரணம்" என்றார்.

இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரையிடம் பேசினோம். "அலுவலகத்திற்கு நேரில் வந்தால் அதற்கான விளக்கத்தை அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுத் தருகிறேன்" என கூறினார். அதுமட்டுமின்றி, "தனியார் கட்டிடங்களில் பாலகங்கள் அமைப்பதை அரசால் தடுக்க முடியாது" எனவும் சுருக்கமாக முடித்துக்கொண்டார். ஆவினுக்குப் பால் ஊத்திடாதீங்கப்பா!

(கட்டுரையாளர்: அரியன்பாபு/ குமுதம் ரிப்போர்ட்டர் / 22.07.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow