Achuthanandan: 82 வயதில் முதல்வர் பதவி.. சிபிஎம் உருவாக வித்திட்டவர்: யார் இந்த அச்சுதானந்தன்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாவதற்குக் காரணமாக இருந்த 32 உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்த வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவரது மறைவினையொட்டி பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்: கேரள அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத நபராகவும், இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் திங்கள்கிழமையான இன்று மாலை (21.07.2025) காலமானார். அவருக்கு வயது 101.
கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் அவதிப்பட்டு வந்தார் வி.எஸ்.அச்சுதானந்தன். திருவனந்தபுரம் பட்டோம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை 3.30 மணிக்கு காலமானார். அச்சுதானந்தன் ஜூன் 23 அன்று SUT-யில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி 1923-ஆம் ஆண்டு பிறந்தார் அச்சுதானந்தன். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால், பள்ளிக்கல்வியினை தொடர இயலாமல் துணி கடை, கயிறு தொழிற்சாலை போன்றவற்றில் பணியாற்றினார்.
அரசியல் களத்தில் அச்சுதானந்தன்:
தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட அச்சுதானந்தன், அரசியலில் களம் இறங்கினார். 1938 ஆம் ஆண்டு கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்த அச்சுதானந்தன், 1940 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். ஆலப்புழா மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்துவதில் முக்கிய நபராக விளங்கினார்.
1946 ஆம் ஆண்டு நடைப்பெற்ற வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த புன்னப்பரா-வயலார் எழுச்சிப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். இதனால், இவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்தப் போராட்டம் கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வேர்விடக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சிபிஎம் கட்சி உதயம்:
1964 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாவதற்குக் காரணமாக இருந்த 32 உறுப்பினர்களில் அச்சுதானந்தனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1980 முதல் 1992 வரை கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகப் பணியாற்றினார். 1985 முதல் 2009 வரை கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தார்.
82 வயதில் முதல்வர் பதவி:
1965 ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட போது தோல்வியடைந்தார். அதன்பின் 2016 ஆம் ஆண்டு வரையில் நடைப்பெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். 7- முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள சட்டமன்றத்தில் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் அச்சுதானந்தன் தான். கிட்டத்தட்ட சுமார் 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராகப் பணியாற்றினார். அச்சுதானந்தன் முதல்வராக பதவியேற்ற போது அவருக்கு வயது, 82. அச்சுதானந்தன் என்றாலே அரசியல் வட்டாரத்தில் அவரது எளிமை, நேர்மை, தியாகம் குறித்து தான் அதிகம் பேசப்படும்.
வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவினைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?






