என் பையனை MLA-வாக கொண்டு வர எண்ணம் இருக்கு: மௌனம் கலைத்த திருநாவுக்கரசர்
அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு 30 சீட்டுகளுக்கு மேல் அதிமுக தராது என அடித்துச் சொல்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர். குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்காக அவர் வழங்கிய சிறப்பு நேர்க்காணலின் விவரம் பின்வருமாறு-

மாநில காங்கிரஸ் தலைவர் பதவி, திருச்சி எம்.பி. பதவி என அனைத்தையும் இழந்த பிறகான சு.திருநாவுக்கரசரின் நீண்ட மவுனம், காங்கிரஸ் கட்சியினர் இடையே மிகப்பெரிய சஸ்பென்ஸை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அவரது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும், சட்டசபைத் தேர்தலுக்காக கட்சிகள் தொடங்கியிருக்கும் வியூகங்கள் குறித்தும் உரையாடினோம்.
'தமிழகத்தில் பா.ஜ.க வளர்கிறது. காங்கிரஸ் தேய்கிறது' என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பொதுவாக, மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி இங்கும் பவர்ஃபுல்லாக இருப்பது போன்ற மாயத்தோற்றம் இருக்கத்தான் செய்யும். ஆனால், தேசியக் கட்சிகளால் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்க முடிவதில்லை. அதிலும் பாஜக தமிழகத்தில் ஆட்சியில் இருந்ததே இல்லை இனி மேலும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், காங்கிரஸ் இருந்திருக்கிறது. உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், முன்பு இருந்ததைவிட பாஜக தமிழகத்தில் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது. ஆனால், நான்கு அடியிலிருந்து நாற்பது அடிக்கு வளர்ந்துவிட்டார்கள் என சொல்ல முடியாது. அதற்காக காங்கிரஸ் தேய்ந்துவிட்டது எனவும் சொல்லமாட்டேன். காங்கிரஸ் ஜாதி, மதத்தைக் தாண்டி எல்லா இடத்திலும் இருக்கிறது.
அ.தி.மு.க கூட்டணியில் 50 சீட், ஆட்சியில் பங்கு என்கிறது பா.ஜ.க. ஆனால், காங்கிரஸ் முழுவதும் தி.மு.க.வைச் சார்ந்தே இருக்கும் கட்சியாகவே மாறியிருப்பதாக எழும் விமர்சனம் பற்றி?
அப்படி ஒப்பிட வேண்டியதில்லை. ஆட்சியில் இல்லாத அதிமுகவிடம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. 150 சீட் கூட கேட்கலாம். ஆனால், 30 சீட்டுக்கு மேலே அதிமுக தராது. அவ்வளவுக்குத் தான் பாஜகவுக்கும் இங்கு சக்தி உள்ளது. அதேசமயம் எங்கள் கூட்டணியில், காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பது வருந்தக்கூடிய விஷயம்தான்'
அதிமுகளின் குழப்ப நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள், அதிமு.க.வை இ.பி.எஸ். நல்ல நிலைக்கு கொண்டுவருவாரா?
எடப்பாடி முதல்வராக நான்கு வருடங்களை வெற்றிகரமாக முடித்துவிட்டார். கட்சியின் பெரும் பகுதி தொண்டர்கள் அவரிடம்தான் இருக்கிறார்கள். அதுவே பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போதுமானதா இல்லையா? என்பது வேறு விஷயம். அந்த கட்சியில் இன்று பலமாக இருப்பது எடப்பாடிதான். கலைஞர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தேர்தலில் நின்று, ஜெயித்து தன் பலத்தை நிரூபித்துவிட்டார். எடப்பாடி தன் பலத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். 2026 தேர்தல் முடிவைப் பொறுத்துதான் எதையும் சொல்ல முடியும்.
'தி.மு.கவிடம் அதன் கூட்டணிக் கட்சிகள் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டன என்கிறாரே எடப்பாடி?
"அரசியல் ரீதியாக ஒரு கட்சியின் மீது இன்னொரு கட்சி இப்படியெல்லாம் விமர்சனம் முன்வைப்பது இயற்கை எடப்பாடிக்கு இருக்கும் நிர்பந்தம் மற்றும் பாஜக என்ன பண்ணுகிறது. என ஆயிரத்தெட்டு விஷயம் இருக்கிறதில்லையா!"
தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கூடுதல் சீட் கேட்கின்றன. காங்கிரஸாலும் கூடுதல் சீட் பெறமுடியும் என நினைக்கிறீர்களா, செல்வப்பெருந்தகை அதை பெற்றுத்தருவாரா?
"எதார்த்தம் ஒன்று இருக்கிறது. தி.மு.க தங்கள் பெரும்பான்மைக்கு போக மீதமுள்ள இடங்களைத்தான் பிரித்துக் கொடுக்க முடியும். ஒவ்வொருவரும் 25 சீட் எதிர்பார்த்தால், 450 தொகுதிகள் இருந்தால்தான் முடியும். காங்கிரஸைப் பொறுத்தவரை, தொகுதி பங்கீட்டின் போது இங்கு செல்வப்பெருந்தகை தலைவரா, நான் தலைவரா என்பதெல்லாம் விஷயம் அல்ல, நாங்கள் பேச்சுவார்த்தைதான் நடத்தலாம். முடிவு செய்ய டெல்லியில் இருந்துதான் வருவார்கள். ஆனால், கூடுதல் சீட் வேண்டும் என ஆசைப்படுவது இயற்கைதான். அது தவறு கிடையாது'
கடந்த எம்.பி. தேர்தலில் உங்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. திருநாவுக்கரசரின் முக்கியத்துவம் தமிழக காங்கிரஸில் குறைந்து வருகிறதோ?
“சீட் கிடைக்காததில் வருத்தம்தான். அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற ஒரு தொகுதியில் எதனால் நான் போட்டியிடாமல் இருக்க வேண்டும்? வேறு தொகுதியையாவது கொடுத்திருக்கலாம் அதற்கான பரிகாரத்தை காங்கிரஸ்தான் தேட வேண்டும். விதியோ, சதியோ தெரியாது. எனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு தி.மு.க காரணம் என சொல்லமுடியாது. செல்வப்பெருந்தகை அப்போதுதான் வந்தார், பாவம். ராகுலும் காரணமில்லை. ஆனால், யாராலோ அந்த வாய்ப்பு போய்விட்டது.
திருநாவுக்கரசர் கோபத்தில் இருப்பதாகவும், காங்கிரஸிலிருந்து விலகப்போவதாகவும் பேசப்படுகிறதே?
அப்படியென்றால் சீட் இல்லை என்று சொன்னதுமே திருச்சி, மயிலாடுதுறையில் என்னால் எதிர்த்துப் போட்டியிட்டிருக்க முடியாதா? செய்யவில்லை எனும்போதே சாந்தமாக இருக்கிறேன் என்றுதானே அர்த்தம். இனிமேல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. நின்றுதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமும் எனக்கு இல்லை. என் பையனை மீண்டும் எம்.எல்.ஏ.வாக கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ராஜ்யசபா எம்பி மாதிரி ஏதாவது எனக்கு ராகுல் பண்ணுவார் என நம்புகிறேன். பண்ணினால் கட்சிக்கு நல்லது.
விஜய்யின் அரசியல் வரவு தமிழ்நாட்டில் எப்படி இருக்கும்?
டாப் நடிகர் விஜய் உச்சத்தைத் துறந்து துணிச்சலாக அரசியலுக்கு வந்திருக்கிறார். திமுக பக்கம் அவரால் வரமுடியாது, பாஜக இருப்பதால் அதிமுக கூட்டணிக்கும் நோ' சொல்லிவிட்டார். ஆனால், இதுவரை அவர் காங்கிரஸை விமர்சிக்கவில்லை. இப்போதைக்கு அவர் தனியாக போகும் தோற்றம் இருக்கிறது. ஆனால், ஜனவரிக்கு மேலே ஏதாவது முடிவெடுக்கலாம் ஒருவேளை தனியாகவே பயணிப்பதாக இருந்தால் 'பாஸ்' பண்ணுகிறாரா எனப் பார்ப்போம். ஒருவேளை நான்கு முனைப் போட்டி என்றால் அது திமுக காங்கிரஸ் கூட்டணிக்குதான் சாதகமாக இருக்கும்.
(கட்டுரையாளர்: அ.கண்ணதாசன் / புகைப்படம்: செந்தில்நாதன் / குமுதம் ரிப்போர்ட்டர் / 22.07.2025)
What's Your Reaction?






