தவெக கொடி பயன்படுத்த தடையா? தேர்தல் ஆணையம் சொன்ன பதில் என்ன?

தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை சின்ன பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

Sep 30, 2024 - 11:55
தவெக கொடி பயன்படுத்த தடையா? தேர்தல் ஆணையம் சொன்ன பதில் என்ன?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களில் அமைந்துள்ளது. கொடியின் நடுவில் வாகை மலரும், 28 நட்சத்திரங்களும், மேலும் அதனை இரண்டு யானைகள் வணங்குவது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
கொடி அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே கொடியில் யானையை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு அது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில், தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம், பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சொந்தமானது எனவும், சட்டப்படி அதைப் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமாக யானை உள்ளதாகவும், இது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, இதை மற்றக் கட்சிகள் பயன்படுத்த முடியாது என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆனந்தன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், “கடந்த 2003ம் ஆண்டு தேர்தல் ஆணையம் கொண்டுவந்த திருத்தத்தில், அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலக் கட்சிகளோ, தேசியக் கட்சிகளோ, அங்கீகரிக்கப்படாத கட்சிகளோ யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது” என்று ஆனந்தன் குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், “அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கும் அதில் இடம்பெற்றிருக்கும் உருவங்களுக்கும் ஒப்புதலோ, அங்கீகாரமோ கொடுப்பது தேர்தல் ஆணையம் இல்லை. சின்னங்கள், பெயர்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டம் 1950க்கு உட்பட்ட வகையில் இருப்பது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும். மேலும், கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்தக் கட்சிகள் உறுதிசெய்ய வேண்டும்” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதனடிப்படிஅயில் தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த எந்த சிக்கலும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளதால், அக்டோபர் 27 ஆம் தேதி நடக்க உள்ள தவெக மாநாட்டிற்கு தவெக தொண்டர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow