மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது 

பழம்பெரும் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sep 30, 2024 - 12:01
Sep 30, 2024 - 12:03
மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது 
mithun chakraborty

கொல்கத்தாவைப் பூர்விகமாகக் கொண்ட மிதுன் சக்கரவர்த்தி 1976ம் ஆண்டு பிரபல இந்திய இயக்குநர் மிர்னாள் சென் இயக்கிய மிருகயா என்கிற தியப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றார். இவரது நடிப்பில் வெளியான டிஸ்கோ டான்சர் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரும் வெற்றிப்படமாய் அமைந்து இவரை பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக மாற்றியது.

திரைத்துறையில் இவர் நிகழ்த்திய சாதனைகள் பல. சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த வில்லன் என மூன்று பிரிவுகளிலும் விருதினைப் பெற்றிருக்கிறார். 1989ம் ஆண்டில் மட்டும் இவர் நாயகான நடித்து 19 படங்கள் வெளியாகின. இது மிகப்பெரும் சாதனையாகக் கருதப்பட்டு லிம்கா புத்தகத்தில் இச்சாதனை இடம் பெற்றிருக்கிறது.

இவர் நடிகர் மட்டுமின்றி அரசியலிலும் இயங்கி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் உள்ள இவர் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்து பல விருதுகளை வென்றுள்ள சிறந்த நடிகரான இவருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியத் திரையுலகில் ஆளுமை செலுத்தியவர்களை கௌரவிக்கும் விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவிருக்கிறது.

இவ்விருது வரும் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் 70வது தேசியத் திரைப்பட விழாவில் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மிதுன் சக்கரவர்த்தி கடந்த 2015-ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான 'யாகாவாராயினும் நாகாக்க' என்கிற தமிழ்ப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow