பிரவீன் சக்கரவர்த்தி ஆர்எஸ்எஸ், பாஜகவின் குரலாக பேசுகிறார்: செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
பிரவீன் சக்கரவர்த்தி ஆர்எஸ்எஸ், பாஜகவின் குரலாக பேசுகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேசியதாவது:“பிரவீன் சக்கரவர்த்தி பேசுவது எல்லாம் காங்கிரஸின் குரல் அல்ல. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தனிநபராக பிரவீன் சக்கரவர்த்தி முயற்சிக்கிறார். விஜய்யுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்ததற்கும் காங்கிரஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற அவரது பகல் கனவு பலிக்காது.இந்தியா கூட்டணி பலமாக இருக்கிறது. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற மறைமுகமாக சில சக்திகள் வேலை பார்க்கின்றன. அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.உ.பி.யையும், தமிழகத்தையும் ஒப்பிட்டுப் பேச முடியாது. ஏழை மக்களின் வீட்டை இடிக்கும் புல்டோசர் ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகின்றது. அவர் யோகியின் குரலாகப் பேசுகிறாரா?
பிரவீன் சக்கரவர்த்தி கூறிய புள்ளிவிவரங்கள் தவறானவை. 4.61 விழுக்காடு கடனில் அதிமுக ஆட்சி விட்டுச்சென்றது. அதனை 3 விழுக்காடாக குறைத்தது திமுக அரசு. இந்த நிதி ஆளுமையை பொறுத்துக் கொள்ளாமல் பேசுவது நியாமில்லை. காங்கிரஸில் இருந்து பாஜக குரலாகப் பேசுபவர்களை அனுமதிக்க மாட்டோம்.
தலித்துகள், சிறுபான்மையர்கள் இல்லாமல் ஆட்சி செய்வோம் என்று யோகி சொல்கிறார். இதனை பிரவீன் சக்கரவர்த்தி ஆதரிக்கிறாரா? இந்த தரவுகளே தில்லுமுல்லுதான். 2021-க்குப் பிறகு உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை தமிழகம் தலைமை தாங்குகிறது.
உ.பி.யில் நடக்கும் காட்டாட்சியை நியாயப்படுத்துபவர் எப்படி காங்கிரஸ்காரராக இருக்க முடியும்?. பிரவீன் சக்கரவர்த்தி குறித்து காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். பிரவீன் சக்கரவர்த்தி தன்னுடைய வளர்ச்சி மற்றும் விளம்பரத்திற்காக பேசுகிறார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை காலூன்ற வைக்க உளவு வேலை பார்ப்பவர்களை அனுமதிக்க முடியாது.ஜோதிமணி எம்.பி. வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், 'தமிழ்நாட்டை உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகள் கவர்னர் மூலம் முடக்கப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. பா.ஜ.க.விற்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது நமது வேலையல்ல' .திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் முடிவு எட்டப்படும்.” எனத் தெரிவித்தார்.
What's Your Reaction?

