போலீஸ் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த வழக்கு.. இளைஞருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடிங்கி தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடிங்கி தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 18ம் தேதி இரவு கடலூர் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள மதுக்கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அபினேஷ் என்ற நபர் தனது நண்பருடன் அங்கு நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அபினேஷ் மற்றும் அவரது நண்பரை அங்கிருந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்து காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அபினேஷ் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடிங்கி அதனை அருகில் இருந்த நீர்நிலை தண்ணீரில் வீசியிருக்கிறார்.
இதனையடுத்து , அபினேஷை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அபினேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி கே.ஜி. திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், மனுதாரர் மீது எந்த தவறும் இல்லை என்றும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் ஜோசப் செல்வம், மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்த மனுதாரரை அங்கி இருந்து செல்லுமாறு அறிவுறுத்திய போது அவர் மறுத்ததோடு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வாக்கிடாக்கியை தண்ணீரில் எறிந்ததாக கூறினார். எனவே ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென அபினேஷ்க்கு நிபந்தனை விதித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
What's Your Reaction?