தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு ! 'VETO' அஸ்திரத்தை கையில் எடுத்த டிரம்ப்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ‘VETO’ என்ற ஒற்றை வார்த்தை பொறிக்கப்பட்ட தொப்பியைப் பகிர்ந்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nov 4, 2026 - 13:06
தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு !  'VETO' அஸ்திரத்தை கையில் எடுத்த டிரம்ப்!
Trump Pulls Out VETO Card !

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசியல் போராட்டத்தைத் தொடரத் தயாராகிவிட்டார். தேர்தல் தோல்வியால் துவண்டுவிடாமல், ‘VETO’ என்ற ஒற்றை வார்த்தை மூலம் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை வெளிப்படுத்தியுள்ளார் டிரம்ப்.

தீயாய் பரவும் டிரம்ப் பதிவு!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் அமோக வெற்றி பெற்றுள்ளதாக ஊடகங்கள் கணித்துள்ளன. இதன் மூலம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது. டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கு இது மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், டிரம்ப் தனது Truth Social சமூக வலைதளத்தில் சிவப்பு நிற MAGA தொப்பியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தத் தொப்பியில் ‘VETO’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு டிரம்ப் வெளியிட்ட இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் தனது திட்டங்களை முடக்க முயன்றால், அதிபரின் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக இந்தப் பதிவு உணர்த்துவதாகப் பார்க்கப்படுகிறது.

அரசியல் விமர்சகராக மாறும் டிரம்ப்!

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், அரசியல் விமர்சகராக மாறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

“இந்த வேட்பாளர்கள் ஏன் வெற்றி பெற்றார்கள், ஏன் தோல்வியடைந்தார்கள் என்பது குறித்து நல்லதும் கெட்டதுமாக அரசியல் விமர்சனங்களை முன்வைக்கப் போகிறேன்” என அவர் தனது Truth Social பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தேர்தல் முடிவுகளை ஆராய்வதுடன், குடியரசுக் கட்சியின் தோல்விக்கான காரணங்களையும் வெளிப்படையாக விமர்சிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளை ஏற்கத் தயார்!

ஒருபுறம் ‘VETO’ என்ற வார்த்தையுடன் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்திய டிரம்ப், மறுபுறம் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

The பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள நான் முழுமையாகத் தயாராக இருக்கிறேன். ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றுவோம். அவர்களுடன் பணியாற்றுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு தீர்வைக் கண்டுபிடிப்போம்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நான் போட்டியிட்டிருந்தால்... இமாலய வெற்றி கிடைத்திருக்கும்!

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே குடியரசுக் கட்சியின் தோல்விக்கான காரணத்தை டிரம்ப் முன்வைத்திருந்தார்.

“நான் தேர்தலில் போட்டியிடவில்லை. நான் போட்டியிட்டிருந்தால் நாம் இமாலய வெற்றியைப் பெற்றிருப்போம்!” என அவர் Truth Social தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இடைக்காலத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும், குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்காக டிரம்ப் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார். தேர்தலைத் தனது தேர்தலைப் போலவே கருதி வாக்களிக்க வேண்டும் என்றும் ஆதரவாளர்களிடம் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், தேர்தல் முடிவுகள் குடியரசுக் கட்சிக்கு எதிராக அமைந்துள்ள நிலையில், தனது பிரசாரத்திற்கு கிடைத்த தோல்வியை டிரம்ப் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இளைஞர்கள் முதல் ஹிஸ்பானிக் வாக்காளர்கள் வரை... குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு!

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளைஞர்கள், சுயேச்சை வாக்காளர்கள், கிராமப்புற வாக்காளர்கள் மற்றும் ஹிஸ்பானிக் வாக்காளர்கள் என நான்கு முக்கிய பிரிவினரின் ஆதரவு குடியரசுக் கட்சியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

ஈரான் போர், டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக வரிகள், பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் வாக்காளர்களின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக CNN உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், டிரம்ப்பின் செயல்பாடுகள் மற்றும் அவரது தனிப்பட்ட நிதி நலன்கள் குறித்த கவலைகளும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

குடியரசுக் கட்சியின் கோட்டைகளிலும் ஜனநாயகக் கட்சியின் வெற்றி!

குடியரசுக் கட்சிக்கு பாரம்பரிய ஆதரவு அதிகம் உள்ள மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

தெற்கு கரோலினா மற்றும் டெக்சாஸ் மாநிலங்களில் செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு டெக்சாஸில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், கன்சாஸ் மாநிலத்தில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த குடியரசுக் கட்சியின் ஆதிக்கத்தையும் ஜனநாயகக் கட்சியினர் முறியடித்துள்ளனர்.

டிரம்ப்புக்கு இனி சவாலான 2 ஆண்டுகள்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றுவதால், டிரம்ப் நிர்வாகத்தின் அடுத்தகட்ட அரசியல் பயணம் சவாலானதாக மாறியுள்ளது.

பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சியினரிடம் இருப்பதால், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக விசாரணைகளை நடத்தவும், நாடாளுமன்றக் குழுக்கள் மூலம் ஆவணங்களை கோரவும், அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கவும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

செனட் சபையிலும் ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்துவதால், டிரம்ப் பரிந்துரைக்கும் முக்கிய அதிகாரிகளின் நியமனங்களைத் தடுத்து நிறுத்தும் அதிகாரமும் அவர்களுக்கு கிடைக்கும்.

இதனால், டிரம்ப் தனது நிர்வாகத்தின் முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதிலும், புதிய சட்டங்களை கொண்டு வருவதிலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

‘VETO’ அஸ்திரம்... டிரம்ப்பின் அடுத்த அரசியல் ஆயுதமா?

அமெரிக்க அதிபருக்கு நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களை வீட்டோ மூலம் நிராகரிக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், அதிபரின் வீட்டோவை மீறி ஒரு மசோதாவை சட்டமாக்குவதற்கு பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும்.

இதனால், ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் மசோதாக்களை டிரம்ப் வீட்டோ மூலம் தடுத்து நிறுத்த முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தோல்வி ஒருபுறம் இருந்தாலும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகக் கட்சியினருக்கு சவால் விடுக்க டிரம்ப் தயாராகி வருகிறார் என்பதையே ‘VETO’ தொப்பி உணர்த்துவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அரசியலில் ஜனநாயகக் கட்சியின் ‘நீல அலை’ எழுந்துள்ள நிலையில், டிரம்ப்பின் ‘சிவப்பு தொப்பி’ அரசியல் மோதலுக்கு புதிய அடையாளமாக மாறுமா? அல்லது இரு கட்சிகளும் இணைந்து செயல்படுமா? என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

தேர்தல் வெற்றியால் ஜனநாயகக் கட்சியினர் உற்சாகத்தில் இருக்கும் நிலையில், ‘எனக்கு கவலையில்லை’ என்பது போல் தனது அடுத்தகட்ட அரசியல் ஆயுதத்தை வெளிப்படுத்தியுள்ள டிரம்ப், அமெரிக்க அரசியலில் புதிய மோதலுக்கு தயாராகி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow