நியூ கலிடோனியாவில் கலவரம்! அவசர நிலை பிரகடனத்தை அறிவித்த பிரெஞ்சு அரசாங்கம்...என்ன பிரச்னை?
பிரான்சில் தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில், நியூ கலிடோனியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் இருக்கும் பிரான்ஸ் அரசாங்கத்தின் வெளிநாட்டுப் பகுதி, நியூ கலிடோனியா மாகாணம். இதில் பிரஞ்சு மக்களுடன், கனக்ஸ் என்கிற பழங்குடியின மக்களும், ஐரோப்பிய காலனித்துவவாதிகள் சந்ததியினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர். கடந்த 1853-ம் ஆண்டு இந்த மாகாணம் பிரெஞ்சு அரசுடன் இணைக்கப்பட்டு, 1957-ல் அனைத்து மக்களுக்கும் பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனாலும், பல நூற்றாண்டுகளாக இப்பகுதியின் பூர்வ குடிகளான கனக் பழங்குடியின மக்களுக்கும், பிரஞ்சு மக்களுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்நிலையில், இந்த மாகாணத்திற்கு குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கும் புதிய சட்டதிருத்தம், நாடாளுமன்ற இரு அவைகளிலும் முன் மொழியப்பட்டது. ஆனால், அதில் கனக் மக்கள் ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அப்பகுதியில் கடந்த 13-ஆம் தேதி மாகாணம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. அதில் பிரஞ்சு அரசியல்வாதிகளுக்கும், ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் சந்ததியினருக்கும் இந்தச் சட்டம் சாதகமாக இருக்கும் என்றும், இதன் மூலம் கனக் பழங்குடியின மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் என்றும் கூறி, கனக் ஆதரவாளர்கள் போராடியபோது கலவரம் வெடித்தது. அதில், நூற்றுக்கணக்கான பிரெஞ்சு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டதால், பல நகரங்கள் போர்க்களமாக காட்சியளித்தது.
பிரெஞ்சு பேருந்துகள் மற்றும் வாகனங்களையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். போராட்டத்தை கட்டுப்படுத்த பிரெஞ்சு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், 130-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அந்த மாகாணம் முழுவதும், போராட்டங்களைக் கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தலைநகர் நௌமியாவில் பொதுமக்கள் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
போராட்டம் நடந்த சில பகுதிகளில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. பிரான்சிலிருந்து அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
What's Your Reaction?