தங்க தமிழ்ச்செல்வனை வனவாசம் அனுப்புவேன் - டி.டி.வி.தினகரன் சூளுரை
"பிரதமரிடம் உரிமையுடன் கேட்டு தேனி தொகுதிக்கு நலத்திட்டங்களை செய்வேன்"
தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனை வனவாசம் அனுப்புவேன் என டி.டி.வி.தினகரன் சூளுரைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் பாஜக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டமனூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு வீர வேல் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து மக்களிடையே உரையாற்றிய டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி மேல் உள்ள கோபத்தால் திமுகவை ஆட்சி செய்ய மக்கள் அனுமதித்ததால் இன்று தமிழ்நாடே வறண்டுபோய் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை முறியடிக்க மூன்றாவது முறையாக மோடி பிரதமராகும் வகையில் தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், "14 ஆண்டுகள் ராமர் வனவாசம் போனது போல் சிலர் செய்த சதியால் நான் ஒதுங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று காலம் கனிந்ததால் மீண்டும் மக்களைத் தேடி வந்துள்ளேன். திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வனை வனவாசம் அனுப்புவதற்குதான் நான் இங்கு வந்துள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டி.டி.வி.தினகரன், "தேனி தொகுதியின் வளர்ச்சிக்காக பிரதமரிடமும் உரிமையுடன் கேட்டு நலத்திட்டங்களை செய்வேன். முந்தைய முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது எப்படி பணியாற்றினேனோ அதேபோல் மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள குக்கரைப் பார்க்கும் போதெல்லாம் எனது ஞாபகம் வர வேண்டும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த பிறகு அவற்றையெல்லாம் பெற்றுத் தருவேன்" எனக் கூறினார்.
What's Your Reaction?