பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக எடப்பாடி தொடர்ந்த வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளதால், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என எடப்பாடி பழனிசாமி கூறியதை ஏற்ற தனி நீதிபதி, சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலனை நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் எடப்பாடி பழனுச்சாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு இன்று (ஜனவரி 18) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகள் உத்தரவின்படி வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளதாக பழனிச்சாமி சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
What's Your Reaction?