டஃப் கொடுக்கும் கோவை தொகுதி... அண்ணாமலை உட்பட 41 வேட்புமனுக்கள் ஏற்பு

கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 41 வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம். 

Mar 28, 2024 - 19:31
டஃப் கொடுக்கும் கோவை தொகுதி... அண்ணாமலை உட்பட 41 வேட்புமனுக்கள் ஏற்பு

கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 41 வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. 

கோவை தொகுதியில் போட்டியிட பாஜக சார்பாக அண்ணாமலை, திமுக சார்பாக கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்ட 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இன்று (28-03-2024) கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி வேட்புமனுக்களை பரிசீலனை செய்தார். பல்வேறு குறைபாடுகள் இருந்த 18 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 41 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கிராந்திகுமார் பாடி அறிவித்தார். வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள்.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். திமுக சார்பாக கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பாக கலாமணி ஜெகநாதன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. கோவையில் மொத்த 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கு நடைபெற்ற 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 9 இடங்களில் அதிமுகவும், 1 இடத்தில் அப்போது கூட்டணியில் இருந்த பாஜக சார்பாகப் போட்டியிட்ட வானதி சீனிவாசனும் வெற்றிபெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கோட்டையாக இருக்கும் கோவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், அந்தத் தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் பாஜகவின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பது கோவை மக்களவைத் தேர்தல் முடிவே நிர்ணயிக்கும் என்று கூறப்படுவதால், அந்தத் தொகுதிக்கு பாஜக அதிகமாக மெனக்கெடவும் செய்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow